பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக கடந்த 30-ந்தேதி கன்னியாகுமரி வந்து இருந்தார். அன்று மாலை பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். இதைத்தொடர்ந்து மோடி, படகு மூலம் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம் சென்றார்.
அங்கு பகவதியம்மனின் ஸ்ரீபாதத்தை தரிசனம் செய்து விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில்தியானத்தை தொடங்கினார். நள்ளிரவில் தியான மண்டபம் அருகே உள்ள அறையில் சற்று ஓய்வெடுத்தார்.
துறவி கோலம்
நேற்ற அதிகாலை 5 மணி அளவில் காவி உடை, நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் அணிந்து, வலது கையில் ருத்ராட்ச மாலையுடன் துறவிக் கோலத்தில் மோடி ஓம் என்ற மந்திரம் ஒலிக்க தியானம் செய்தார். பின்னர் அவர் கையில் இருந்த சிறிய மாலையில் உள்ள மணிகளை உருட்டியபடியே விவேகானந்தர் பாறையை வலம் வந்தார். அதிகாலையல் கிழக்கு நோக்கிகைகூப்பியபடி சூரிய உதயத்தை தரிசித்தார். சூரிய ஒளியில் முக்கடல்களும் சேரும் இடம் ஜொலிப்பதை பிரதமர் மோடி ரசித்துப் பார்த்தார்.
இதைத்தொடர்ந்து தான் கொண்டு வந்த வெண்கலக் கெண்டியில் இருந்து கங்கை தீர்த்தத்தை சிறிது சிறிதாக கடலில் ஊற்றி, கங்கா வழிபாடு மற்றும் சூரிய உதயகால பூஜைகளை நடத்தினார். பின்னர், விவேகானந்தர் மண்டபம் சென்ற பிரதமர், விவேகானந்தர் சிலைமுன்பு தரையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார்.
தியானம்
பின்னர் தியான மண்டபம் சென்று தியானத்தை தொடர்ந்தார். அப்போது, அமைதியான சூழலில் ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம் ஒலித்துக் கொண்டிருந்தது. சுமார் 5 மணி நேரத்துக்கு ஒருமுறை தியானம் முடிந்து ஓய்வெடுக்க அறைக்கு வரும்போது, பிரதமரின் உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.
இந்தநிலையில் இன்று (1ந்தேதி) 3 வது நாளாக பிரதமர் மோடி சூரிய உதய காட்சியை தரிசித்தார். பின்னர், தியானத்தை தொடர்ந்த அவர் மதியம் ஒரு மணியளவில் தனது சுமார் 40 மணி நேர தியானத்தை முடித்துக்கொண்டார்.
புறப்பட்டார்
விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து தனி படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்கு சென்று அங்கு மாலை அணிவித்து வணங்கினார். முன்னதாக, விவேகானந்தா மண்டப படிக்கட்டில் நின்றவாறு கேந்திரா நிர்வாகிகள், ஊழியர்களுடன் நின்று குழு போட்டோ எடுத்து கொண்டு பிரதமர் மோடி தனது 3 நாட்கள் தியான பயணத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டார்.
கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்ற மோடி அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரியில் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டு இருந்தன.
ஆதார் அட்டை இருக்கும் சுற்றுலா பயணிகள் மட்டும் விவேகானந்தர் பாறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால், பிரதமர் தியானம் செய்யும் தியான மண்டபம் பகுதிக்கு யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதையும் படியுங்கள்: காங்.கூட்டணி தலைவர்கள் முக்கிய ஆலோசனை