வடகிழக்கு இங்கிலாந்தில் கடந்த திங்கள்கிழமை நடந்த பிரபல யோகா மற்றும் நடன நிகழ்ச்சியில் பதின்ம வயது இளைஞர் ஒருவர் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 3 குழந்தைகள் கொல்லப்பட்டனர். மேலும், 11 பேர் காயமடைந்தனர். ஹாலிவுட்டின் திகில் திரைப்படத்தைப் போல நடந்த இந்தக் காட்சியைக் கண்ட மக்கள் ரத்த வெள்ளத்தில் தலைதெறித்து ஓடினர்.
இந்தக் கொடூர தாக்குதலில் அலைஸ் டஸில்வா அகுய்வர் (9), எல்சீ டாட் ஸ்டான்கோம்ப் (7), பெபி கிங் (6) ஆகிய மூன்று குழந்தைகள் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இங்கிலாந்தின் லிவர்ஃபூலுக்கு அருகேயுள்ள கடலோர நகரமான சௌத்போர்ட் நகரில் நேரிட்டது இந்தக் கொடூரம். இந்தக் கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக, 17 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டதாக மெர்சிசைட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சிறுவன் இவ்வாறு கொலை செய்வதற்கான காரணம் என்னவென எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இந்தத் தாக்குதல் பயங்கரவாதம் தொடர்பானது அல்ல என்று புலனாய்வுத் துறையினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் , 3 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், 9 குழந்தைகள் காயமடைந்தனர். இவர்களில் 6 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இந்தத் தாக்குதலின்போது குழந்தைகளைப் பாதுகாக்க முயன்ற 2 பேர் காயமுற்று ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் கொலைச் சம்பவங்கள் மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கலவரம்
மூன்று சிறுமிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் 17 வயது இளைஞன் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக இங்கிலாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, குழந்தைகள் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான அரசின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் தீவிர வலதுசாரிகளென அறியப்படும் இங்கிலீஷ் டிஃபென்ஸ் லீக் (ஆங்கிலேயர் தற்காப்பு அமைப்பு) என்ற அமைப்பின் ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களிலும் வன்முறைகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தக் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள சிறுவன் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்பதாகப் பரவிய வதந்திகளால் இந்தக் குழப்பமும் கலவரமும் தூண்டப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பல வன்முறைப் போராட்டங்களை நடத்துகின்றனர். செவ்வாய்க்கிழமைன்று (ஜூலை 30) சௌத்போர்ட்டில் உள்ள ஒரு மசூதிக்கு வெளியே காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் சௌத்போர்ட் மசூதியில் மோதல் வெடித்ததால் காவல்துறை வேன் தீ வைத்து எரிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் அதிகாரிகள் மீது கற்கள், பாட்டில்கள் மற்றும் பிற பொருள்களை வீசத் தொடங்கியதால் கலவரம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. காவல்துறையின் அறிக்கையின்படி, ஆங்கில பாதுகாப்பு லீக்கின் ஆதரவாளர்கள் “சரணடைய வேண்டாம்” என்ற முழக்கங்களை எழுப்பினர். முழக்கங்கள் எழுப்பப்பட்ட நிலைமையைச் சமாளிப்பதற்கு காவல்துறை கலகத் தடுப்பு வேன்களும் அதிகாரிகளும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.
வன்முறை ஏற்படுத்துதல் மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக லண்டன் பெருநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய லண்டனில் டவுனிங் தெருவில் உள்ள இங்கிலாந்து பிரதமர் கியெர் ஸ்டார்மரின் இல்லத்திற்கு அருகே புதன்கிழமை (ஜூலை 31) மாலை கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் பியர் கேன்களை வீசினர்.
கிளர்ச்சியாளர்கள் அதிகப்படியான கோபம் மற்றும் தவறான தகவல்களால் லண்டனில் உள்ள பிரதமரின் இல்லத்திற்கு அருகில் காவல்துறையினருடன் வியாழக்கிழமையும் (ஆகஸ்ட் 1) தாக்குதலில் ஈடுபட்டனர்.
வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஹார்ட்ல்பூல் நகரத்திலும் வன்முறை ஆர்ப்பாட்டக்காரர்களையும் போலீஸார் எதிர்கொண்டனர்.
50 காவல்துறையினர் காயம்
சௌத்போர்ட்டில் நடந்த கலவரத்தின்போது 53 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். மேலும், 3 மோப்ப நாய்களும் காயமடைந்தன.
இங்கிலீஷ் டிஃபென்ஸ் லீக்கின் (ஆங்கிலேயர் தற்காப்பு அமைப்பு) ஆதரவாளர்கள் என்று நம்பப்படும் எதிர்ப்பாளர்கள், இரவு 7.45 மணிக்கு, மசூதியின் மீது செங்கற்களை வீசத் தொடங்கியதும் மசூதிக்கு வெளியேயும் கலவரம் தொடங்கியது. போராட்டக்காரர்கள் செங்கற்கள், குப்பைத் தொட்டிகள், பட்டாசுகள், கான்கிரீட் துண்டுகள், பாட்டில்கள் ஆகியவற்றை போலீஸ் அதிகாரிகள் மீது வீசினர்.
போலீஸ் வேன்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்தனர். பல அதிகாரிகள் ரத்தம் வழிந்த முகத்துடன் காணப்பட்டனர். போராட்டக்காரர்கள் ஒரு கடையைச் சேதப்படுத்தினர். செங்கற்களை போலீஸார் மீது எறிந்து, படகுகளை நிறுத்துங்கள், எங்கள் பெண்களை காப்பாற்றுங்கள், என்று கூச்சலிட்டனர். வன்முறை ஏற்படுத்துதல் மற்றும் கத்தி வைத்திருந்ததற்காக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சௌத்போர்ட் மசூதியின் தலைவர் இப்ராஹிம் ஹுசைன் கூறும்போது, வன்முறை பயங்கரமாக இருந்தது. ஒருகட்டத்தில் அவர்கள் உள்ளே வருவார்கள் என்று நாங்கள் நினைத்தோம். அவர்கள் மசூதியை எரிக்கப் போகிறார்கள் என்று அஞ்சினோம்” என்று கூறினார்.
பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர், பாதிக்கப்பட்டு உயிரிழந்த குழந்தைகள் நினைவாக மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தச் சென்றபோது பார்வையாளர்களில் ஒருவர், எங்கள் தெருக்களில் இன்னும் எத்தனை குழந்தைகள் சாகப் போகிறார்கள்? அடுத்தது என்னுடைய குழந்தையா? என்று கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மெர்சிஸ்சைட் காவல்துறையின் தலைமைக் காவலர் செரீனா கென்னடி கூறுகையில், “காயமடைந்த குழந்தைகள் அல்லாக பெரியவர்கள் இருவர், தாக்குதலுக்கு உள்ளான குழந்தைகளைப் பாதுகாக்கத் துணிந்து முயன்றுள்ளனர். உலகப் புகழ்பெற்ற பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் பெயரில் பள்ளி விடுமுறையின் முதல் வாரத்தில் 6 முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்கான நடன – யோகா பயிற்சிப் பட்டறை நடைபெற்றுள்ளது. இரண்டு மணி நேர நிகழ்ச்சி. ஒரு யோகா பயிற்றுவிப்பாளர், ஒரு நடன பயிற்றுவிப்பாளர் பங்கேற்றனர். தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத நபர், தாக்குதல் நடந்த இடத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் வசித்து வந்துள்ளார். அவர் வேல்ஸின் கார்டிஃப் நகரைச் சேர்ந்தவர்” என்றார்.
அருகில் கடை வைத்திருக்கும் பரே வரதன் கூறுகையில், “அவர்கள் நர்சரியில் இருந்து ஓடிக்கொண்டு இருந்தனர். அவர்கள் குத்தப்பட்டுள்ளனர். கழுத்து, முதுகு, மார்பு எல்லா இடங்களிலும் கத்தியால் குத்தப்பட்டிருந்தது” என்றார்.
மேலும், கர்ப்பிணிப் பெண்களுக்கான யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் நடக்கும் இடத்திலிருந்து, ரத்தத்தை உறைய வைக்கும் அளவிற்கு அலறல் சப்தங்களைக் கேட்டதாகவும், குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் வெளியே ஓடிவருவதைப் பார்த்ததாகவும் அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர்.
தெருவில் தனது தாயுடன் வசிக்கும் ரியான் கார்னி கூறும்போது, ”குழந்தைகள் ரத்தத்தில் மூழ்கியிருந்தனர். குழந்தைகளின் முதுகில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களும் இருந்தது. இப்படிப்பட்ட விஷயங்கள் எதுவும் இங்கு நடக்காது. பெரிய நகரங்களான மான்செஸ்டர், லண்டன் போன்ற இடங்களில்தான் இப்படிப்பட்ட கத்திக்குத்துச் சம்பவங்கள் நடக்கும்” என்றார்.
இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சிறுவன், பிரிட்டனில் பிறந்தவன்தான் என்றும் இவனுடைய பெற்றோர்களில் ஒருவர்தான் ருவாண்டாவிலிருந்து வந்து குடியேறியவர் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாடகி டெய்லர் ஸ்விஃபிட் துயரம்
இந்தச் சம்பவம் குறித்து பிரபல பாடகியான டெய்லர் ஸ்விஃபிட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “சௌத் போர்ட்டில் நடந்த கொடூரத் தாக்குதல் என்னைத் தொடர்ந்து உலுக்கிக் கொண்டிருக்கிறது. நான் தற்போது அதிர்ச்சியில் இருக்கிறேன். ஒன்றுமறியா இந்தக் குழந்தைகளின் உயிரிழப்புகள் அங்கு இருந்த அனைவருக்கும், அவரது குடும்பங்களுக்கும் ஏற்பட்ட பயங்கரமான அதிர்ச்சியாகும். உயிரிழந்தவர்கள் ஒரு நடன வகுப்பில் பயிலவந்த குழந்தைகள். இந்தக் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களை எப்படித் தெரிவிப்பது என்று தெரியாமல் நான் தவித்துக் கொண்டிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவ பாடகியான டெய்லர் ஸ்விஃபிட்டின் ரசிகர்கள் இதுவரையிலும் 40,000 யூரோ (சுமார் ரூ. 43 லட்சம்) நிதி திரட்டியுள்ளனர்.
கியெர் ஸ்டார்மர்
இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு பதிலளித்த பிரதமர் கியெர் ஸ்டார்மர், “ இது மிகவும் பயங்கரமானது, மிகவும் அதிர்ச்சிக்குரியது” என்றும் கூறினார்.
மன்னர் சார்லஸ் இரங்கல்
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் III இதுகுறித்துக் கூறுகையில், “இந்தப் பயங்கரமான சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது இரங்கல்கள், பிரார்த்தனைகள், ஆழ்ந்த அனுதாபங்கள்” என்றார்.
இதுபோல இதற்கு முன், 1996 ஆம் ஆண்டில், 43 வயதான தாமஸ் ஹாமில்டன் என்பவர், ஸ்காட்லாந்தில் உள்ள டன்பிளேனில் உள்ள பள்ளியில் உடற்பயிற்சிக் கூடத்தில் 16 மாணவர்களையும் அவர்களின் ஆசிரியரையும் சரமாரியாகச் சுட்டுக் கொன்றார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கிட்டத்தட்ட தனிநபர்கள் கைத் துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கான உரிமையை ரத்து செய்து உத்தரவிட்டது பிரிட்டன் அரசு.
அதன் பிறகு பிரிட்டனில் துப்பாக்கிகளால் சுட்டுப் பெரிய அளவில் படுகொலைகள் நடப்பது என்பது மிகவும் அரிதானது. 2023 மார்ச் மாதத்திலிருந்து இதுவரையிலான கொலைகளில் 40 சதவிகித சம்பவங்களில் கத்திகளே பயன்படுத்தப்பட்டுள்ளன.