பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5- ந்தேதி சென்னை பெரம்பூரில் தான் கட்டிவரும் புதிய வீட்டின் முன்பு நின்றபோது மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். உணவு டெலிவரி ஊழியர்கள் போல் வந்த கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி சாய்த்து விட்டு தப்பினர்.
11 பேர் கைது
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை காட்சிகளும் அங்குள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி இருந்தது.
இதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி ஏற்கனவே கொலையுண்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு மற்றும் அவரது கூட்டாளிகள் திருவேங்கடம், அருள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.ரவுடி ஆற்காடு சுரேசின் கொலைக்கு பழிக்கு பழியாக கொலை நடந்ததாக கூறப்பட்டது.
வேறு காரணம்
ஆனால் இந்த கொலையில் வேறு காரணம் இருப்பதாக போலீசார் நம்புகிறார்கள்.
இதைத்தொடர்ந்து கைதான 11 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு போலீசாரின் விசாரணையின் போது தப்பியோட முயன்றதாக திருவேங்கடம் என்பவர் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டார். மற்ற 10 பேரையும் போலீசார் விசாரணை முடிந்து மீண்டும் ஜெயிலில் அடைத்தனர். இதில் பொன்னை பாலு உள்பட 3 பேரை மீண்டும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க திட்ட மிட்டு உள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த திமுக நிர்வாகி.. வெளியான பகீர் தகவல்!
பெண்வக்கீல்
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எழும்பூர் கோர்ட்டில் வக்கீலாக உள்ள மலர்க்கொடி, ஹரிஹரன் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதில் மலர்க்கொடி முன்னதாக கைதான அருளுடன் தொடர்ச்சியாக செல்போனில் பேசிவந்தது தெரியவந்து உள்ளது. மேலும் வங்கி பரிவர்த்தனைகளை கண்காணித்த போது அதில் பல லட்சம் வரை பணம் பரிவர்த்தனை நடந்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் மலர்க்கொடி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மலர்க்கொடி, ஹரிஹரனிடம் செம்பியம் போலீசார் தீவிர சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மர்ம முடிச்சுகள்
இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கு விசாரணை தீவிரம் அடைந்து உள்ள நிலையில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது. அவர்களிடம் விசாரணை நடத்தி பின்னரே கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும். விரைவில் ஆம்ஸ்ட்ராங்க் கொலையில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.