இத்தாலியில் உள்ள சிறிய மலைக்கிராமம் பாக்லியாரா டெய் மார்சி (Pagliara dei Marsi). இங்கே கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பிறந்துள்ளது. இது அந்த கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கிராமத்தில் கடந்த மூன்று தசாப்தங்களாக குழந்தை பிறப்பு இல்லை. இதற்குக் காரணம் எந்த மருத்துவ அல்லது சுற்றுச்சூழல் பிரச்னையும் அல்ல. வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளுக்காக இளம் வயதினர் நகரங்களுக்கு இடம்பெயர்ந்ததன் விளைவாக, இந்தக் கிராமத்தில் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வந்துள்ளது.

தற்போது இந்த கிராமத்தில் வசிப்போர் எண்ணிக்கை சுமார் 20 பேர் மட்டுமே; பெரும்பாலோர் முதியவர்கள்.
இந்தச் சூழலில், 2025 மார்ச் மாதத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு லாரா புஸ்ஸி டிராபுக்கோ என்று பெயரிடப்பட்டுள்ளது.
அவளது பெற்றோர் பாவ்லோ புஸ்ஸி (56) மற்றும் சின்சியா டிராபுக்கோ (42). இருவரும் முன்பு நகரத்தில் வசித்து வந்தவர்கள்.
பின்னர் கிராம வாழ்க்கையைத் தேர்வு செய்து அங்கு குடியேறி குடும்பம் நடத்த தொடங்கியுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிராமத்தில் பிறந்த குழந்தையாக இருப்பதால், மக்கள் அவளை “மிராக்கிள் பேபி’ என்று அழைக்கின்றனர்.