30 மீனவர்கள் கைது எதிரொலி: உடனடி நடவடிக்கை கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | Chief Minister Stalin written a letter to Minister S. Jaishankar over fishermen issue

1379218
Spread the love

சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள் இன்று (அக்.9) அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், இதுவரை சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள், இன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்துத் தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கூட்டுப்பணிக் குழுவை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்று (09.10.2025) அதிகாலை, ஐந்து இந்திய மீன்பிடிப் படகுகள் மற்றும் 47 மீனவர்கள் (30 தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் 17 காரைக்கால் மீனவர்கள்) இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். சிறைபிடிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டின் கடலோர கிராமங்களைச் சேர்ந்த 30 மீனவர்களும், நான்கு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளும் அடங்கும்.

இந்தக் கைது சம்பவம் மீனவ சமூகத்தினரிடையே பெருத்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடலோர மாவட்ட மக்களிடையே அச்சம் மற்றும் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. 2025-ம் ஆண்டில், ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான மீனவர்கள் கைது செய்யப்பட்ட முதல் நிகழ்வு இதுதான்.

இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது, நமது மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்குவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் தங்களது பாரம்பரிய தொழிலைத் தொடர்வதில் உள்ள மன உறுதியையும், நம்பிக்கையையும் வெகுவாக பாதிக்கும். இன்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 242 மீன்பிடிப் படகுகளும், 74 மீனவர்களும் இலங்கைக் காவலில் உள்ளனர்.

எனவே, நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவித்திட உரிய அதிகாரிகள் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக முயற்சிகளை மேற்கொள்ளவும், கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *