36 பயணிகளுடன் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்; கவலைக்கிடமான நிலையில் ஒருவர் – ஊட்டியில் சோகம்!

Spread the love

நீலகிரி மாவட்டம், ஊட்டியிலிருந்து இன்று மதியம் தங்காடு கிராமத்தை நோக்கிப் பயணிகளுடன் இயக்கப்பட்ட தனியார் மினி பஸ் ஒன்று, மணலாடா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த வேளையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மலை காய்கறி தோட்டத்திற்குள் பாய்ந்த மினி பஸ்ஸில் இருந்து பயணிகளின் அலறல் சத்தத்தைக் கேட்ட விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பலரும் பதறிக் கொண்டு ஓடி பயணிகளை ஒவ்வொருவராக மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான மினி பஸ்

உடனடியாக ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, காயம்பட்ட பயணிகளை ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். காயமடைந்த 36 பயணிகளுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்த காவல்துறையினர், “டிரைவர் பன்னீர்செல்வம், கண்டக்டர் ஜெகதீஸ் ஆகியோரால் இயக்கப்பட்ட இந்த மினி பஸ்ஸில் 21ஆண்கள், 12 பெண்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 36 பயணிகள் பயணித்திருக்கிறார்கள். அனைவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான மினி பஸ்

ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. விவசாய நிலத்தில் விபத்து ஏற்பட்டதால் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. திடீரென ஸ்டேரிங் லாக் ஆனதாகச் சொல்கிறார்கள். காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *