Last Updated:
விஜயபுரா கோல்கும்பாஸ் பகுதியில் சமீர் ரவுடியை தயபா மற்றும் அஸ்லாம் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் ரவுடியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு இளம்பெண் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் கோல்கும்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் சமீர் என்கிற பி.கே. இனந்தர். 26 வயதான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதான தயபா என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் – மனைவி போன்று ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் இருவரும் எந்தவொரு சண்டை சச்சரவும் இன்றி மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். திடீரென அண்மைக் காலமாக தொட்டதற்கு எல்லாம் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் எல்லை மீறிய சமீர், தனது காதலியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், லிவிங் டுகெதரில் இருந்த காதலனை கொலை செய்து விட்டதாக கூறி, கோல்கும்பாஸ் காவல் நிலையத்தில் இளம்பெண் தயபா சரணடைந்துள்ளார். அதைக் கேட்டு போலீசாரே ஆடிப் போயுள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளைஞரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம்பெண்ணை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்ட சமீர் ரவுடி என்பது தெரியவந்துள்ளது. இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே சமீருக்கும், தயபாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். பின்னர், இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக லிவிங் டுகெதரில் இருந்து வந்துள்ளனர். ஆனால், சமீர் தனது ரவுடியிசத்தை காதலியிடமே காட்டியதால் ஓராண்டுக்கு முன்பு தயபா பிரிந்து சென்றுள்ளார்.
இருந்தபோதும், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கெஞ்சிக் கூத்தாடி காதலியை அழைத்து வந்து ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். ஒருசில நாட்கள் அமைதியாக இருந்தவர் மீண்டும் அடாவடி செய்ய தொடங்கியுள்ளது. இதனால் வெறுத்துப்போன தயபா, தனது சகோதரன் அஸ்லாம் உடன் இணைந்து சமீரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி சம்பவத்து அன்று இருவரும் சமீரை தாக்கி, கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன்பேரின் லிவிங் பார்ட்னரை கொலை செய்த வழக்கில் இளம்பெண், தனது சகோதரனுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். காதல் ஜோடி இடையே ஏற்பட்ட தகராறில் தான் ரவுடி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
November 19, 2025 6:05 PM IST
4 ஆண்டுகளாக ‘லிவிங் டுகெதர்’.. ரவுடியை கொலை செய்த காதலி.. போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்!
