4 ஆயிரம் பேரிடம் ரூ.200 கோடிக்கு மேல் மோசடி – மூவரை காவலில் எடுத்து விசாரித்த சைபர் கிரைம் போலீஸார் | More than Rs 200 crores fraud from 4000 people

1293721.jpg
Spread the love

புதுச்சேரி: 4 ஆயிரம் பேரிடம் ரூ.200 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக மூவரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர், வேலை வாய்ப்புகள் குறித்து பேஸ்புக்கில் தேடியுள்ளார். அப்போது அதில் வந்த ஒரு விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசியபோது கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி மர்ம நபர்கள் ரூ.17,71,000 பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளனர்.

இது குறித்து ரமேஷ்குமார் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தனிப்படை அமைக்கப்பட்டு மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா சென்று தீவிரமாக தேடினர். இதில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுபம் ஷர்மா(29), அவரது கூட்டாளிகளான அதே மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் குர்ஜார்(28), பிஹாரைச் சேர்ந்த தீபக்குமார்(28), உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்கவுண்ட்(23) ஆகியோர் இந்த மோசடிகளில் ஈடுபட்டனர் என்பதும், பெங்களுருவில் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து பெங்களூர் விரைந்த தனிப்படையினர் அங்கு சுபம் ஷர்மா உள்ளிட்ட 4 பேரையும் கடந்த 2-ம் தேதி கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 4 பேரும் கூட்டாக சேர்ந்து இந்தியா முழுவதும் 4000-க்கும் மேற்பட்ட நபர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.200 கோடிக்கு மேல் மோசடி செய்ததும், 9 மாநில போலீஸார் அவர்களை தேடி வந்ததும் தெரியவந்தது. மேலும் இதற்கு அசாம் கான் என்பவர் மூளையாக செயல்பட்டதும் தெரிந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து செல்போன், பாஸ்போர்ட், சிம்கார்டுகள், லேப்டாப், ஏடிஎம் கார்டுகள் மற்றும் ரூ.41 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக சுபம் ஷர்மா உள்ளிட்ட 3 பேரை சைபர் கிரைம் போலீஸார் நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் பல தகவல்கள் வெளியாகின.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை: இது தொடர்பாக புதுச்சேரி சீனியர் எஸ்பி கலைவாணன் ஐபிஎஸ் கூறியதாவது: ”வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடியில் சிக்கிய மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகள் 3 பேரை காவல்துறை விசாரணைக்காக எடுத்து விசாரித்தோம். அவர்களுக்கு எதிராக நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 126 புகார்கள் நிலுவையில் உள்ளன. நேஷ்னல் க்ரைம் ரிப்போர்ட்டிங் போர்டல் ( NCRP) விவரப்படி 126 புகார்களில் ரூ.2 கோடியே 49 லட்சம் பொதுமக்கள் பணத்தை இழந்ததாக தெரிய வருகிறது. அவர்களுடைய 4 வங்கி கணக்குகள் மீதான விசாரணையில் ரூ.7 கோடியே 89 லட்சம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மோசடியாக அவர்களுடைய வங்கிகளுக்கு வந்துள்ளது.

அவர்கள் மோசடிக்கு பயன்படுத்திய 21 வங்கி கணக்குகளின் விவரங்கள் இப்போது தெரியவந்தது. அவற்றில் எவ்வளவு பணம் வந்துள்ளது என்ற விவரம் விசாரணையில் கண்டுபிடிக்கப்படும். எங்களுக்கு கிடைத்த 126 புகார்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். வழக்கின் விசாரணையை மேற்கொண்டு அந்தந்த மாநில போலீஸார் தொடங்குவார்கள். நாளுக்கு நாள் நாடு முழுவதும் இணைய வழி மோசடி அதிகரித்து வருவதால் பொதுமக்கள் இணைய வழியில் பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம். வெளிநாடு வேலை வாய்ப்பு, முதலீடு செய்தால் தினம் தினம் அதிக வருமானம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் பல கோடி ரூபாய் சம்பாதிக்கலாம்,

பொருட்களை குறைந்த விலைக்கு தருகிறோம், பிரபலமாக இருக்கக்கூடிய நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி ஏமாற்றுதல் அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் இணைய வழி தகவல்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் தினந்தோறும் இணைய வழியில் ஏமாற்றப்பட்டதாக இருபதுக்கும் மேற்பட்ட புகார்கள் புதுச்சேரியில் மட்டும் வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *