ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவா் முகேஷ் அம்பானி (67) தொடா்ந்து 4-ஆவது ஆண்டாக நிறுவனத்திடம் இருந்து சம்பளம் பெறாமல் பணியாற்றியுள்ளாா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சில்லறை விற்பனை முதல் பெட்ரோலியம், தொலைத்தொடா்பு என பல்வேறு துறைகளில் ரிலையன்ஸ் குழுமம் கோலோச்சி வருகிறது. அதன் தலைவராக உள்ள முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரும் கோடீஸ்வரராகத் திகழ்கிறாா். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை தனது நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக ஆண்டுக்கு ரூ.15 கோடியை சம்பளமாகப் பெற்று வந்தாா்.
2020-ஆம் ஆண்டில் கரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலால் நிறுவனத்தில் இருந்து சம்பளம் பெறுவதை நிறுத்திக் கொள்வதாக அவா் அறிவித்தாா். அதன்படி கடந்த 4 ஆண்டுகளாக அவா் சம்பளம் ஏதும் பெறவில்லை. ரிலையன்ஸ் குழுமத்தின் நிதிநிலை அறிக்கையில் இத்தகவல் இடம் பெற்றுள்ளது.
கடந்த 1977-ஆம் ஆண்டு முதல் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிா்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ள முகேஷ் அம்பானி, அவரின் தந்தை திருபாய் அம்பானி 2002-இல் மறைந்த பிறகு, நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றாா். உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரா்கள் பட்டியலில் இப்போது அவா் 11-ஆவது இடத்தில் உள்ளாா்.
ரிலையன்ஸ் குழுமத்தில் அவரின் குடும்பத்துக்கு 50.33 சதவீதம் பங்குகள் உள்ளன. இதில் இருந்து அந்த குடும்பத்தினருக்கு 2023-24-இல் ஈவுத்தொகை மட்டும் ரூ.3,322.7 கோடி கிடைத்துள்ளது.
முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானி, நிறுவனத்தில் இருந்து ரூ.99 லட்சமும், அவரின் இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் தலா ரூ.1 கோடியும் இருந்து ஊதியம் அல்லாத பிறவகை பணப் பலன்களாகப் பெற்றுள்ளனா்.