காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் உட்பட 4 கோயில்களின் 53.386 கிலோ மதிப்பிலான பயன்பாட்டில் இல்லாத தங்கத்தை, மத்திய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி, தங்க முதலீட்டுத் திட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கியில், அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.கே. சேகர்பாபு ஆகியோர், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, துரைசாமி ராஜூ முன்னிலையில் ஒப்படைத்தனர்.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில், குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயில், திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத பிரித்தெடுக்கப்பட்ட 53 கிலோ 386 கிராம் எடையுள்ள பலமாற்றுப் பொன் இனங்களை மும்பையிலுள்ள மத்திய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி, தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் செந்தில்குமாரிடம் அமைச்சர்கள் ஆர்.காந்தி,
பி.கே. சேகர்பாபு, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, துரைசாமி ராஜூ ஆகியோர் ஒப்படைத்தனர். அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலிலிருந்து 42 கிலோ 326 கிராம், குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலிருந்து 2 கிலோ 640 கிராம், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயிலிலிருந்து 4 கிலோ 070 கிராம், திருமலைவையாவூர், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலிலிருந்து 4 கிலோ 350 கிராம் என மொத்தம் 53 கிலோ 386 கிராம் எடையுள்ள பலமாற்றுப் பொன் இனங்கள் இன்றைய தினம் பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் சி. பழனி, காஞ்சிபுரம் எம்பி. செல்வம், எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, இணை ஆணையர்கள் வான்மதி, குமரதுரை, துணை ஆணையர்கள் சித்ராதேவி, ஜெயா, உதவி ஆணையர்கள் கார்த்திகேயன், ராஜலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.