2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தி.மு.க கூட்டணிக்குள் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட்டது ம.தி.மு.க. உதயசூரியன் சின்னத்திலேயே ம.தி.மு.க வேட்பாளர்கள் களமிறங்கி 4 இடங்களில் வெற்றிபெற்றனர். அதையடுத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சியில் போட்டியிட்டபோதும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க நிர்பந்தித்தது தி.மு.க. அதற்கு ‘உயிரே போனாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவேன்’ என ஆவேசம் காட்டினார் துரை வைகோ.

ஒருவழியாக தி.மு.க-வும் சம்மதித்தது. ஆனால் மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கச் சொல்லி நிர்பந்திப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் துரை வைகோ அப்செட்டில் இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், இப்போது கூட்டணியும், தொகுதிப் பங்கீடும் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக செய்தி வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பாக வெளியான இறுதித் தொகுதிப் பங்கீடு தொடர்பான அறிக்கையில், “நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் – மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் இன்று (11-3-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாட்டில் 4 (நான்கு) சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதெனவும், அதில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கப்படும் சின்னத்திலும் போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.