ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 4 நாள்களாக ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி இன்றும் (டிச.26) தொடர்கிறது.
கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்திலுள்ள விவசாய நிலத்தில் கடந்த திங்களன்று (டிச.23), சேத்துனா (வயது 3) என்ற பெண் குழந்தை 700 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது. அந்த ஆழ்துளைக் கிணற்றின் 150வது அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி 4 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இதுகுறித்து, தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரி யோகேஷ் மீனா கூறுகையில் குழந்தை தவறி விழுந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் 160 அடி ஆழத்திற்கு மற்றொரு குழி தோண்டப்பட்டதாகவும், 155 ஆவது அடியில் ஒரு பாறை இருந்ததினால் குழித்தோண்டும் பணி தாமதாமானதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மீட்புப் பணிக்கு தேவையான பொருள்களை அந்த இடத்திற்கு கொண்டு செல்வது மிகுந்த சவாலான ஒன்றாக இருந்ததினாலும், குழித்தோண்டும் இயந்திரத்தை அங்கு கொண்டுச் செல்ல சில மின்கம்பங்கள் அகற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது எனவும் அந்த குழித்தோண்டும் பணி முடிந்தவுடன் குழந்தைக்கு நேராக சுரங்கம் ஒன்று தோண்டி சேத்துனா மீட்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.