கரூர்: கரூர் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தின் வழக்கு தொடர்பாக, உயிரிழந்த ஏமூர் புதூரைச் சேர்ந்த 9 வயது சிறுவனின் தாய் மற்றும் 40 வயது பெண்ணின் கணவர் ஆகியோர் நேற்று நடைபெற்ற உச்ச நீதிமன்ற விசாரணையில் வீடியோ கான்பரன்ஸில் ஆஜராகினர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஏமூர் புதூரைச் சேர்ந்த பன்னீர் செல்வத்தின் மகன் பிரித்திக்(9), செல்வராஜ் மனைவி சந்திரா (40) ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து கரூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சிறுவன் பிரித்திக்கின் தந்தை பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து, பன்னீர்செல்வத்தின் மனைவி சர்மிளா, “எனது கணவர் என்னை விட்டு 8 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்று விட்டார்.
மகனின் இறுதிச் சடங்குக்குக் கூட அவர் வரவில்லை. பணத்துக்காக அவர் சிபிஐ விசாரணை கோரியிருக்கலாம்” என தெரிவித் திருந்தார். அதிமுக நிர்வாகி இதேபோல, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்திருந்ததாக கூறப்படும் சந்திராவின் கணவர் செல்வராஜ் கூறும்போது, “அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் விசிகே.பாலகிருஷ்ணன், எனது மகனின் வேலை தொடர்பாகவும், மனைவி இறந்ததற்கு உதவித்தொகை வழங்குவது தொடர்பாகவும் எனக் கூறி என்னிடம் கையெழுத்து பெற்றார்” என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கரூரில் இருந்து சர்மிளா, செல்வராஜ் ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு ஆஜராகினர்.
இதுகுறித்து அவர்களின் வழக்கறிஞர் தமிழ்முரசு கூறியதாவது: கரூரில் தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரங்கோலி தகவலின்பேரில், பசுபதிபாளையத்தில் உள்ள எனது அலுவலகத்தில் இருந்து சர்மிளா, செல்வராஜ் இருவரும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகினர்.
இதில் செல்வராஜ், “உச்ச நீதிமன்றத்தில் நான் மனு செய்ய வில்லை, என் கையெழுத்தை வைத்து இன்னொருவர் ஆள்மாறாட்டமாக வழக்கு தொடர்ந்துள்ளார்” என தெரிவித்தார். சர்மிளா, “கணவர் பன்னீர் செல்வம் என்னை பிரிந்து 8 ஆண்டுகளாகின்றன. யாரோ சொல்லிக்கொடுத்து பணத்தாசைக்காக வழக்கு தொடர்ந்துள்ளார்” என்றார். வழக்கறிஞர் கோரி மனுமேலும், செல்வராஜும், சர்மிளாவும் இவ்வழக்கில் தங்களுக்காக வாதாட வழக்கறிஞர் வேண்டும் என சட்டப் பணிகள் ஆணைக் குழுவிடம் மனு அளித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.