45: "நான் திரும்ப உயிரோட வருவேனான்னு.." – புற்றுநோய் சிகிச்சை குறித்து சிவராஜ்குமார் எமோஷனல்

Spread the love

சிவராஜ்குமார், உபேந்திரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘45′. அர்ஜுன் ஜன்யா இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

ராஜ் பி. ஷெட்டி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் டிச. 25-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (டிச. 22) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சிவராஜ்குமார் தன்னுடைய புற்றுநோய் பாதிப்பு குறித்து பகிர்ந்திருக்கிறார்.

தனது மனைவியுடன் சிவராஜ்குமார்
தனது மனைவியுடன் சிவராஜ்குமார்

“எனக்கு ஏதோ ஒரு மருந்து கொடுத்தார்கள். மயக்க நிலைக்குச் சென்றேன். அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.

5, 6 மணி நேர சிகிச்சைக்குப் பிறகு என் மனைவியைப் பார்த்தேன். என் மனைவியின் முகத்தைப் பார்த்து, அவரது கையைப் பிடித்தேன்.

திரும்ப உன் கையைப் பிடிப்பேன் என்று நான் நினைக்கவில்லை எனச் சொன்னேன்.

நான் புற்றுநோய் சிகிச்சைக்குப் போகும்போது ரொம்ப எமோஷனல் ஆகிவிட்டேன்.

என் ரசிகர்கள், குடும்பத்தினரின் கண்ணீரைப் பார்த்து எனக்கும் கண்ணீர் வந்தது. நான் திரும்ப உயிரோட வருவேனா? இல்லையா? என்றே தெரியாமல் பயந்துவிட்டேன்.

ஆனால் டாக்டர்கள் கடவுள் போன்றவர்கள். என்னை குணப்படுத்திவிட்டார்கள்.

ஆனாலும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் 2, 3 நாட்கள் கழித்துதான் என்னால் நார்மலாக முடிந்தது.

சிவராஜ்குமார்
சிவராஜ்குமார்

அந்த நேரத்தில் யார் போன் செய்தாலும் உடனே என் கண்களிலிருந்து கண்ணீர் வந்துவிடும்.

எவ்வளவு வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம், பணம் வரும் போகும், ஆனால் இந்த அன்பை எப்போது சம்பாதிப்பேன்? எனக்குக் கிடைத்ததுபோல வேறு யாருக்கு இப்படியான அன்பு கிடைக்கும். அனைவருக்குமே நன்றி சொல்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து அவரின் தம்பி புனித் ராஜ்குமார் குறித்து பேசிய சிவராஜ்குமார், “என் தம்பி புனித் ராஜ்குமாருக்கு 46 வயசுதான்.

வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இப்போதெல்லாம் 20, 18 வயசிலேயே இளம் மரணங்கள் நடக்கின்றன.

புனித் குழந்தையில் இருந்தே, எப்போதுமே என் அப்பா, அம்மாவுடனேயேதான் இருப்பார்.

புனித் ராஜ்குமார்
புனித் ராஜ்குமார்

எங்களைவிட அதிகமாக பெற்றோரிடம் இருந்தது புனித்தான். ஒரு ஷூட்டிங் விடாமல் அப்பாவுடன் சென்றுவிடுவார்.

சிறு வயதிலேயே ஸ்டார் ஆகி, நேஷனல் அவார்டும் கிடைத்துவிட்டது.

ஒருவேளை அம்மா, அப்பாவுக்கு புனித் தேவைப்பட்டிருக்கார்போல, அதனால்தான் இளம் வயதிலேயே அவரை அழைத்துக்கொண்டார்கள்” என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *