கேரளத்தில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 13) கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்ட துப்புரவுத் தொழிலாளியின் உடல் 46 மணி நேரம் கழித்து இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
துப்புரவுத் தொழிலாளியான ஜாய் (42) கேரளத்தின் மறையமுட்டம் பகுதியில் தன் தாய் மெல்லியுடன் வசித்து வந்தார். தனியார் ஏஜென்சியில் துப்புரவுத் தொழிலாளராகப் பணிபுரிந்து வந்த ஜாய், அந்த நிறுவனத்திற்காக திருவனந்தபுர மத்திய ரயில் நிலையத்திற்கு அடியில் ஓடும் கால்வாயைச் சுத்தப்படுத்தும் குழுவினருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (ஜூலை 13) பெய்த கனமழையால் கால்வாயில் நீர்வரத்து அதிகமாகி ரயில்வே தண்டவாளங்களின் கீழுள்ள கால்வாய் பகுதியில் ஜாய் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
அவரை மீட்பதற்காக கேரளத்தின் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் ஸ்கூபா டைவர்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழு ஆகியோர் திருவனந்தபுர மத்திய ரயில் நிலையக் கால்வாயில் 2 நாள்களாகத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஆனால், குப்பைகள் அதிகமாக அடைத்துக் கிடந்ததால் தேடுவதில் சிரமம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளனர்.
இதில், மீட்புப் படையினரின் முயற்சிகள் பலனளிக்காமல் போனதால், கடற்படையைச் சேர்ந்த 6 பணியாளர்கள் ஜாயின் உடலைக் கண்டுபிடிக்க நேற்று (ஜூலை 14) இரவு தேடுதலில் இறங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை ஜாயின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள தக்கரப்பரம்பு பகுதியின் ஸ்ரீ சித்ரா ஹோம் பின்புறக் கால்வாயில் இன்று கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.