ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், தமிழகம் முழுவதும் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து கோயில்களின் வரவு-செலவு குறித்த ஆண்டு தணிக்கை விவரங்களை அறநிலையத் துறையின் இணையதளத்தில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பிடிஎப் வடிவில் பதிவேற்றம் செய்யுமாறு அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர். அருண் நடராஜன், “ரூ.1 கோடிக்கும் மேல் வருமானம் உள்ள 48 கோயில்களின் வரவு செலவு தொடர்பாக தணிக்கை செய்யப்பட்டு, அதுகுறித்த சுருக்கமான விவரங்கள் இணையத்தி்ல் பதிவேற்றம் செய்யப்பட்டு வி்ட்டது, மேலும், பல கோயில்களின் தணி்க்கை விவரங்கள் தயாராக உள்ளன” என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “அறநிலையத் துறை சார்பில் சுருக்கமான தணிக்கை விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், தமிழகம் முழுவதும் உள்ள 48 பெரிய கோயில்களின் தணிக்கை தொடர்பான முழு விவரங்களையும் இரு வாரங்களில் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு, விசாரணையை டிச. 18-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
