'5 ஆண்டுகள், 65 டன், ரூ.10 கோடி மதிப்பு' – கும்பகோணம் சிற்பக் கூடத்தில் உருவான ஆதிபராசக்தி சிலை!

Spread the love

கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் பகுதியில் தனியார் சிற்பக் கூடம் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் பனமரத்துபட்டி கிராமத்தில் ஆதிபராசக்தி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பஞ்சலோக சிலை வைப்பதற்கு நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். அதன்படி இந்த பஞ்லோக ஆதிபராசக்தி சிலை தயாரிக்கும் பணியை கொரநாட்டு கருப்பூர் சிற்ப கூடத்திற்கு வழங்கினர். ஸ்தபதி கோபு மற்றும் பணியாளர்கள் சிலையை வடிவமைக்கும் பணியை மேற்கொண்டனர். 25 முதல் 50-க்கும் மேற்பட்ட சிற்ப கலைஞர்கள் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கும்பகோணத்தில் செய்யப்பட்ட ஆதிபராசக்தி சிலை

சிலையின் ஒவ்வொரு பாகங்களும் தனித்தனியாக மெழுகால் வார்த்து அச்சு எடுக்கப்பட்டு, 38 அடி உயர ஆதிபராசக்தி மெழுகு சிலை உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் தங்கம், வெள்ளி, காப்பர், ஈயம், நாகம் ஆகிய 5 உலோகங்களை உருக்கி ஒரே வார்ப்பில் சிலை தயாரிக்கப்பட்டது. அதன்பின்னர் சிற்ப கலைஞர்கள் ஒன்றினைந்து பாலிஷ் செய்து அழகுப்படுத்தி முழு ஆதிபராசக்தி சிலையாக வடிவமைத்தனர். இந்த சிலையை நிறுவுவதற்கு சுமார் 13 அடி உயரத்திற்கு பீடம் தயாா் செய்யப்பட்டது. இந்த சிலை பீடத்துடன் சேர்த்து மொத்தம் 51 அடி உயரமும், 65 டன் எடையும் உள்ளது.

முழு சிலையை உருவாக்குவதற்கு சுமார் 5 ஆண்டுகள் ஆனதாக சிற்ப கூடத்தினர் சொல்கிறார்கள். இதன் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் கும்பகோணத்தில் இருந்து சேலத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இதற்காக சேலம் மற்றும் கும்பகோணத்தில் இருந்து ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு இந்த சிலை லாரியில் ஏற்றப்பட்டு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக மேள தாளங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்தனர்.

சேலம் எடுத்து செல்லப்படும் சிலை

பிரமாண்ட ஆதிபராசக்தி சிலையை பார்த்த அப்பகுதி மக்கள் மெய்சிலிர்த்தனர், மலர்கள் தூவி வணங்கினர். இந்த சிலை ஓரிரு நாட்களில் பனமரத்துபட்டி சென்றடையும் என்கிறார்கள். இது குறித்து சிற்பக்கூடத்தினர் கூறுகையில், “ஐந்து ஆண்டு உழைப்பில் கலை நயத்துடன் இந்த ஆதிபராசக்தி சிலை செய்யப்பட்டுள்ளது. இது எங்களுக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாக கருதுகிறோம். இதன் மதிப்பு சுமார் ரூ.10 கோடி இருக்கும்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *