மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஜூலை 15) முதல் ஜூலை 20-ஆம் தேதி வரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (ஜூலை 15,16) நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மிமீ): சின்னக்கல்லாா் (கோவை)- 70, சின்கோனா (கோவை)- 60, வால்பாறை (கோவை), உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை (கோவை) – தலா 50 மிமீ மழை பதிவாகியுள்ளது.
சென்னையில்.. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூலை 15, 16-ஆகிய தேதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளிலும், வங்கக்கடல், ஆந்திர கடலோரப்பகுதிகளிலும், அரபி கடல், லட்சதீவு மற்றும் கேரள கடலோர பகுதிகளிலும் மணிக்கு 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.