50 மீனவர்கள், 232 மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை: ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம் | TN fishermen Arrest Issue: TN CM Stalin writes to Foreign Affairs Minister JaiShankar

1369261
Spread the love

சென்னை: “இலங்கையால் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள 232 தமிழக மீன்பிடி படகுகளையும், 50 மீனவர்களையும் விரைவில் விடுவிக்க அவசர மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.” என வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட மற்றொரு துயர சம்பவத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். 13.07.2025 அதிகாலையில், ஏழு மீனவர்கள், பதிவு எண்- IND-TN-10-MM-746 கொண்ட அவர்களின் இயந்திர மீன்பிடி படகுடன் கைது செய்யப்பட்டனர். அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், மற்றொரு இயந்திர படகு (IND-TN-10-MM-1040) இலங்கை கடற்படை கப்பலால் மோதப்பட்டதாகவும், இதன் படகின் பின்புறம் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிய வருகிறது.

மீண்டும் மீண்டும் நிகழும் இந்த சம்பவங்கள் மிகவும் கவலையளிக்கின்றன. அவை நமது மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பங்களை நீண்டகால பொருளாதார நெருக்கடி மற்றும் தொடர்ந்த துயரங்களுக்கும் உள்ளாக்குகின்றன.

இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கும் வகையில், 2024 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மீனவர்களில் பலர் இன்னும் இலங்கை காவலில் உள்ளனர் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். தற்போது, 232 தமிழக மீன்பிடி படகுகளும் 50 மீனவர்களும் இன்னும் இலங்கை அதிகாரிகளால் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தொடர்ச்சியான அச்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கிடைக்கக்கூடிய அனைத்து தூதரக வழிகளையும் மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறேன். கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.” என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *