505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றம்: எடப்பாடி, அன்புமணிக்கு கணக்கு தெரியாது கனிமொழி அட்டாக் – Kumudam

Spread the love

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கைக்குழு தலைவர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தி.மு.க.வின் கடந்த தேர்தல் அறிக்கை போலவே, இந்த தேர்தல் அறிக்கையும் நாட்டிற்கே வழிகாட்டும். 80 ஆயிரம்  மக்களின் கருத்துகளை கேட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளையே தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்துள்ளோம்.

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை காப்பியடிக்கப்பட்டதாக கூறுவது வேடிக்கையானது. கடந்த தேர்தல் வாக்குறுதிகளில் 505-இல் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ஆகியோருக்கு கணக்கு தெரிந்த யாராவது வகுப்பு எடுக்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தாத வாக்குறுதிகளை பட்டியலிட்டால், அது நீண்டுக்கொண்டே போகும்.

எடப்பாடி பழனிசாமிக்கு யாராவது சதவீத கணக்கை சொல்லி கொடுங்கள். திமுக தொடங்கிய மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அதிமுகதான் காப்பி அடித்துள்ளது. நாங்கள் தொடங்கிய உரிமைத் தொகை திட்டத்திற்கு ரூ.2,000 என அறிவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

உலகத்தில் உள்ள பொருளாதார நிபுணர்கள் பலரும், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மக்களின் கையில் பணம் இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்தால் தான் பொருளாதாரம் உயரும். இதை அறியாமல் “இலவசம்… இலவசம்” என்ற வார்த்தையை பயன்படுத்தி சிலர் அவதூறு பிரசாரம் மேற்கொண்டு அரசியல் செய்கிறார்கள்.

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றத்தை முதற்குற்றப் பத்திரிகை கூட பதிவிட முன்வராமல் குற்றவாளிகளை காப்பாற்ற அதிமுக அத்தனை முயற்சிகளை செய்தது. இந்த ஆட்சியில் பெண்களுக்கு எதிராக ஒரு குற்றம் நடந்தால் குற்றவாளிக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சியில் குற்றம் நடந்தால் பாரபட்சமின்றி உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது..

வருமான வரி செலுத்தாத பெண்களுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். பல பேர் வீட்டில் பிரிட்ஜ் இருக்கலாம் அவர்களுக்கு , என்ன பொருள் தேவைப்படுகிறதோ அதை இந்த கூப்பன் மூலமாக வாங்கிக் கொள்ளலாம் இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *