மதுரை: மதுரை மாநகராட்சி அலுவலகத்துக்கு கடந்த 53 ஆண்டுகளாக லாரி தண்ணீர்தான் விநியோகம் செய்யப்படுகிறது. லட்சக் கணக்கான மக்கள் வசிக்கும் மதுரை ஊருக்கே அன்றாடம் குழாய்களில் தடையின்றி குடிநீர் வழங்கும் மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு, குடிநீர் குழாய் இணைப்பு வழங்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் முதல் மாநகராட்சியாக மதுரை உருவாக்கப்பட்டது. 100 வார்டுகளில் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்கு குடிநீர், சுகாதாரம், கல்வி, சாலை உள்ளிட்ட அன்றாட அடிப்படை, மேம்பாட்டு கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக மாநகராட்சி மைய அலுவலகம் தலைமையில், ஐந்து மண்டல அலுவலகங்கள், 100 வார்டு அலுவலகங்கள் செயல்படுகின்றன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், இரவு, பகலாக, மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களுடைய இந்த அயராத உழைப்பால், மக்களுக்கு வைகை அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வந்து வீடுகளுக்கு குழாய்கள் மூலம் நேரடியாக தட்டுப்பாடில்லாமல் விநியோகம் செய்யப்படுகிறது.
குடிநீர் செல்ல முடியாத மேட்டுப்பகுதியான குடியிருப்புகளுக்கு மட்டும் பற்றாக்குறை போக்க லாரிகள் மூலம் மாநகராட்சி குடிநீர் விநியோகம் செய்கிறது. இப்படியாக ஊருக்கே தடையின்றி பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யும் மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு, இன்று வரை குழாய்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட கடந்த 1971ம் ஆண்டு முதல் தற்போது வரை லாரிகள் மூலமே, குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
மாநகராட்சி நினைத்தால், வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதுபோல், பிரம்மாண்ட குழாய்களை பதித்து, 24 மணி நேரமும் மாநகராட்சி அலுவலகத்திற்கு குடிநீர் வழங்க முடியும். ஆனால், என்ன காரணத்தாலோ 53 ஆண்டுகளாக, அரசரடி மாநகராட்சி நீர் தேக்கத்தில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர், மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் உள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட தரைகீழ் தொட்டியில் (சம்பு) தேக்கப்பட்டு, அங்கிருந்து மோட்டார் மூலம், மாநகராட்சி அலுவலக மாடியில் உள்ள தொட்டிகளுக்கு ஏற்றப்பட்டு, அனைத்து தளங்களிலும் உள்ள அலுவலக அறைகளுக்கும், கழிப்பறைகளுக்கும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
மாநகராட்சி அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், அன்றாடம் வரும் பொதுமக்களுக்காக, இந்த தொட்டி தண்ணீர், சுத்திகரிக்கப்பட்டு ஆங்காங்கே உள்ள குடிநீர் குழாய்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீராக வழங்கப்படுகிறது. மாநகராட்சிக்கு இதுவரை பணியாற்ற வந்த ஆணையாளர்கள், மாநகர பொறியாளர்களுக்கே, இந்த பழைய நடைமுறையை மாற்ற முயலவில்லை.
இந்நிலையில் தினமும் 3 லாரி தண்ணீர் ஊற்றப்படும், மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் உள்ள 30 ஆயிரம் லிட்டர் தரைகீழ் தொட்டி முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
மாநகராட்சி பணியாளர்கள் கூறுகையில், “இந்த தொட்டி என்று கடைசியாக சுத்தப்படுத்தப்பட்டு, அன்றாடம் கண்காணிக்கப்படுகிறதா? போன்ற விவரங்களை பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும். ஆனால், அவர்கள் கண்காணிக்க தவறியதாலே இன்று இந்த தொட்டியின் மேல்தளம், குடிநீர் லாரி சக்கரம் ஏறி இடிந்துள்ளது. அதனை மூடி மறைக்க தகரங்களை கொண்டு மூடப்பட்டுள்ளது. அதுவும் சரியாக மூடப்படாமல் இருந்துள்ளது. லாரி தண்ணீரை ஊற்றுவதற்காக, இந்த தரைகீழ் தொட்டியில் மேல் பகுதியில் உள்ள மூடியை கூட லாரி டிரைவர்கள் சரியாக மூடாமல் சென்றுவிடுகிறார்கள். அதனால், இந்த தொட்டியில் பூச்சிகள் விழவும் வாய்ப்பள்ளது. மழைக்காலத்தில் மழைநீரும் புகுந்து வருகிறது,” என்றனர்.
நேற்று பொதுமக்கள் சிலர் பார்த்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றபிறகு மாநகராட்சி ஊழியர்கள், இந்த தரைகீழ் தொட்டியில் உள்ள மூடியை சரியாக மூடியும், மேல் பகுதியில் உடைந்த பகுதியை தகரங்களை கொண்டு சரியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
விரைவில் குடிநீர் குழாய் இணைப்பு: மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் இது குறித்து கேட்டபோது, “ஊருக்கே குடிநீர் வழங்கும் மாநகராட்சிக்கு லாரி தண்ணீர் வருவது கவலையளிக்கும் செயல்தான். மாநகராட்சி மைய அலுவலகம், அந்த காலத்தில் சாலையில் இருந்து 10 அடி பள்ளத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும், அருகில் நெடுஞ்சாலை செய்வதில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் அந்த காலத்தில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. அதனால், லாரிகள் மூலம் குடிநீர் கொண்டு வந்தனர். தற்போது இந்த நடைமுறையை மாற்றி புதிதாக வர உள்ள பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தனி குழாய் இணைப்பு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” என்றனர்.