விழுப்புரம்: நடிகர் விஜய் துவுங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி, வரும் 2026 சட்டசபை தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றி வருகிறது. இதன் முதல்படியாக விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் விஜய் கட்சியின் முதல் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை (அக்.27) நடக்கிறது.
இந்த மாநாட்டுக்காக ஆகஸ்ட் 28-ம் தேதி தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமாலிடம் அனுமதி வேண்டி மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 2- ம் தேதி 21 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல் துறை புஸ்ஸி ஆனந்துக்கு கடிதம் அனுப்பியது. இதற்கு தவெக சார்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காவல் துறை மாநாடு நடத்த அனுமதி அளித்தது. இதையேற்று அக்டோபர் 27-ம் தேதி மாநாடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
‘ரேம்ப்’ அமைப்பு: கடந்த 4-ம் தேதி அதிகாலை விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பணிக்காக பந்தல் கால் நடப்பட்டது. 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மாநாட்டுக்காக 60 அடி அகலம், 170 அடி நீளத்துக்கு மேற்கூரையுடன் மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையில் இருந்து 800 மீட்டர் தொலைவுக்கு விஜய் நடந்து சென்று ரசிகர்களை சந்திக்கும் வகையில் ரேம்ப் அமைக்கப்பட்டுள்ளது.
கட் அவுட்கள்: மாநாட்டு மேடைக்கு இடதுபுறம் சட்டமேதை அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், விஜய் மற்றும் சுதந்திரப் போராட்ட வீராங்கனைகளான வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு மேடைக்கு வலது புறம் தமிழன்னை, சேர, சோழ, பாண்டியர் மன்னர்கள் மற்றும் விஜய் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளது.
55 ஆயிரம் இருக்கைகள்: மாநாட்டு மேடையில். ‘வெற்றிக் கொள்கை திருவிழா’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மாநாட்டு முகப்பு கோட்டை மதில் சுவர் போல் வடிவமைக்கப்பட்டு. அதன் மீது தமிழ்நாடு சட்டமன்றம் வடிவில் முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் அமர 40 கேபின்கள் அமைக்கப்படடு, காவல் துறையிடம் அனுமதி பெற்ற வகையில் 55 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.
40 எல்இடி-கள்: தொண்டர்கள் மாநாட்டை சிரமமின்றி பார்க்கும் வகையில் மாநாட்டு பந்தலுக்கு உள்ளேயும் தேசிய நெடுஞ்சாலை வரையிலும் 40 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நான்காயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தண்ணீர் பாட்டில்கள்: மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு வழங்குவதற்காக 5 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் 1 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு திடல் வளாகத்தில் 300 மொபைல் கழிவறைகள் மற்றும் 700 குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்காக 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த இடங்களில் மின்விளக்கு மற்றும் மருத்துவ குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாக கேபின்… நாளை நண்பகல் 12 மணி முதல் 2 மணிக்குள் தொண்டர்கள் மாநாட்டுத் திடலை அடையவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக கேபின்கள் பிரிக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் அந்தந்த மாவட்டத்துக்கென ஒதுக்கப்பட்ட கேபினில் அமர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரவு 9 மணிக்குள் முடிக்க திட்டம்: மாநாடு நிகழ்வுகள் அனைத்தும் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பகிரும் வகையில் தடையில்லா இணையதள வசதியை ஏற்படுத்த தற்காலிகமாக மொபைல் டவர் அமைக்கப்பட்டுள்ளது. 100 அடி உயரமுள்ள கொடி கம்பத்தில் ரிமோட் மூலம் கட்சித் தலைவர் விஜய் கட்சிக் கொடியை ஏற்றிவைத்துப் பேச உள்ளார். மாநாட்டை இரவு 9 மணிக்குள் முடிக்கும் படி திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.