குஜராத் மாநிலம் சூரத்தின், சச்சின் பாலி கிராமத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று(6ந்தேதி) மதியம் அந்த பகுதியில் இருந்த6 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து சரிந்து விழுந்தது.
பெண்பலி
இந்த விபத்தில் ஒருவர் பலியாகி இருப்பதாகவும், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என் தகவல்கள் வெளியாகி உள்ளன. இடிபாடுகளுக்குள் இருந்து ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து கட்டிட இடிபாடுகள் உள்ள இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கட்டிடம் முழுவதும் சரிந்து விழுந்தால் அதில் உள்ள தூண்களை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. இன்று இரவுக்குள் கட்டிட இடிபாடுகள் முற்றிலும் அகற்றப்பட்டு அதில் மக்கள் யாரும் சிக்கி இருந்தால் உடனடியாக மீட்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மீட்பு பணி தீவிரம்
இடிந்து விழுந்த கட்டிடத்தில் சுமார் 30 வீடுகள் இருந்தன. ஆனால் அதில் 5 குடியிருப்பில் மட்டும் மக்கள் வசித்து வந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. விபத்து நடந்த இடத்தில் மலை போல கான்கிரீட் சுவர்கள் இடிந்து கிடக்கும் காட்சி காண்போரை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. அந்த கட்டிடம் கட்டி, வெறும் 8 ஆண்டுகள் மட்டுமே ஆவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சூரத் மாவட்ட கலெக்டர் டாக்டர் சௌரப் பார்கி கூறுகையில், “ஆறு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு உள்ளார். மேலும் நான்கு அல்லது ஐந்து பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு குழுவினர் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். சில மணி நேரத்தில் மற்றவர்களும் மீட்கப்படுவார்கள் என்றார்.
விசாரணை
சூரத் போலீஸ் கமிஷனர் அனுபம் சிங் கெலாட், கூறும்போது, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் இன்று இரவுக்குள் மீட்கப்படுவார்கள். இடிபாடுகளுக்குள் இருந்து அவர்களின் சத்தம் கேட்கிறது. மீட்பு பணி விரைந்து நடந்து வருகிறது. கட்டிடம் இடிந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.