இது குறித்து நம்மிடம் பேசிய அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ம.வள்ளலார் ஐ.ஏ.எஸ்., “வெளிநாடு வாழ் தமிழர்களின் குறைகளைத் தீர்ப்பது, துன்பத்தில் இருக்கும் தமிழர்களுக்கு உதவுதல், அயல்நாடு முதலாளியிடமிருந்து அவர்களின் கோரிக்கைகளைத் தீர்ப்பதில் உதவுதல், வெளிநாடுகளில் இறக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிர்பாராத வகையில் நேரும் பிரச்னைகளுக்கு வெளிநாடுகளில் உள்ள அந்தந்த இந்திய தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து உதவுவது எனப் பல பணிகளை, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் சார்பில் மேற்கொண்டு வருகிறோம்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் நலனில் கவனம், அக்கறை கொண்டு, இத்துறையை உருவாக்கி, அதற்கு அமைச்சரையும் நியமித்துள்ளது, தமிழக அரசு. 2022-ம் ஆண்டு இத்துறை உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, துறையின் சார்பில் ‘அயலகத் தமிழர் தினம்’ வருகிற ஜனவரி 11, 12-ம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது.