60 நாட்களுக்குப் பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிவு | Mettur dam water level falls below 100 feet after 60 days

1316628.jpg
Spread the love

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 60 நாட்களுக்குப் பிறகு 100 அடிக்கு கீழ் இன்று (செப்.25) சரிந்தது. டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 15,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை காவிரி டெல்டா பாசனத்துக்கான முக்கிய நீர்த்தேக்கப் பகுதியாக விளங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஹெக்டேர் நிலம் மேட்டூர் அணையால் பாசன வசதி பெற்று வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். அதன்படி, அணையில் போதிய அளவு நீர் இல்லாததால், கடந்த ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படவில்லை. அப்போது, அணையின் நீர்மட்டம் 43.52 அடியாகவும், நீர் இருப்பு 13.97 டிஎம்சியாகவும், நீர்வரத்து 404 கன அடியாகவும், குடிநீர் தேவைக்காக 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணை நீர்வரத்து கிடுகிடு என அதிகரித்து முழு கொள்ளளவான 120 அடியை கடந்த ஜூலை மாதம் 30-ம் தேதி எட்டியது. அணைக்கான நீர்வரத்து அதிகரித்தன் காரணமாக, கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி மாலை முதல் டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டது.

பின்னர், ஜூலை மாதம் 30-ம் தேதி கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, 16 கண் மதகுகள் வழியாக உபரிநீரும் திறக்கப்பட்டது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்ததால், அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. இதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. இதனால் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 20,000 கன அடியில் இருந்து 15,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 27-ம் தேதி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71-வது முறையாக 100 அடியை எட்டியது. அதன் பின்னர், 60 நாட்களுக்கு பிறகு, அணையின் நீர்மட்டம் இன்று (செப்.25) 100 அடிக்கு கீழ் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது, அணையின் நீர்மட்டம் 99.79 அடியாகவும், நீர் இருப்பு 64.56 டிஎம்சியாகவும், நீர்வரத்து 1,537 கன அடியாகவும் உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *