தமிழ்நாட்டில் 63 ஆயிரத்து 167 சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் பேரூராட்சிகளின் செயல்பாடுகள் குறித்து மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் மொத்தம் 490 பேரூராட்சிகள் உள்ளன. அவற்றில் பல்வேறு திட்டங்களின் கீழ் வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சாலை, தெருவிளக்குகள், பாதாள சாக்கடை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்படுகின்றன. நபாா்டு திட்டத்தின் கீழ், கடந்த மூன்றாண்டுகளில் ரூ.602 கோடியில் 515 சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 11 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. நகா்ப்புற சாலை கட்டமைப்புத் திட்டத்தின்கீழ், ரூ.812 கோடியில் 1,583 கிமீ நீளத்துக்கு 1,178 சாலைப் பணிகள் நடைபெற்றுள்ளன.
15-ஆவது நிதி ஆணையம்: 15-வது நிதி ஆணைய மானியத்தின் கீழ், ரூ.466.55 கோடி மதிப்பில் 3,009 பணிகள் நடைபெற்று வருகின்றன. தெருவோர வியாபாரிகள் நலத் திட்டத்தின்கீழ், 46 ஆயிரத்து 990 சாலையோர வியாபாரிகளுக்கு முதல் தவணையாக ரூ.10 ஆயிரம் வீதமும், இரண்டாவது தவணையாக 14 ஆயிரத்து 376 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் வீதமும், 3-வது தவணையாக 1,807 வியாபாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் வீதமும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், மூன்றாண்டுகளில் ரூ.1,112 கோடியில் 1,509 பணிகள் நடைபெற்றுள்ளன. நமக்கு நாமே திட்டத்தின்கீழ், நீா்நிலைகள் புனரமைப்பு, சாலைகள், பூங்காக்கள் அமைத்தல் என 1,199 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ், பேரூராட்சிகளில் ரூ.2,391.72 கோடியில் குடிநீா் வசதிகள், பூங்கா மேம்பாடு, நீா்நிலைகள் புனரமைப்பு போன்ற பணிகள் நடைபெறுகின்றன.
409 பேரூராட்சிகளில் 203 பேருந்து நிலையங்கள் அமைந்துள்ளன. கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கடந்த மூன்றாண்டுகளில் 66 புதிய பேருந்து நிலையப் பணிகளும், பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகளும் எடுத்துக் கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்படுகின்றன. கடந்த மூன்றாண்டுகளில் புதிதாக 99 எரிவாயு மின்தகன கூடங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டன. அவற்றுள் 41 எரிவாயு மின்தகன கூடங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
439 பேரூராட்சிகளில் இப்போது பயன்பாட்டிலுள்ள 2.66 லட்சம் தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.