சென்னை: 69 சதவீத இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்பட்டதா என்பது குறித்து நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்’ என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: 69 சதவீத இடஒதுக்கீட்டைப்பின்பற்றி பணியாளர்களைத் தேர்வு செய்யும்போது, முதலில் பொதுப்போட்டிப் பிரிவுக்கான 31 சதவீத இடங்கள் தகுதி அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும்.
அதில் சாதி பார்க்கக் கூடாது. அதன்பின், பின்னடைவுப் பணியிடங்கள் ஏதேனும் இருந்தால், அவை உரிய இடஒதுக்கீட்டுப் பிரிவினரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும். அதன்பிறகுதான் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடங்களை உரிய வகுப்பினரைக் கொண்டு நிரப்ப வேண்டும்.
பொதுப்போட்டி பிரிவிலோ, பின்னடைவுப் பணியிடங்களிலோ, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது பட்டியலினத்தவர் நியமிக்கப்பட்டிருந்தால், அவர்களை இடஒதுக்கீட்டில் பயனடைந்தவர்களாகக் கருதக்கூடாது என்பது சமூகநீதியின் அடிப்படை.
ஆனால், இந்த விதியைப் பின்பற்றாமல் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம், பொதுப்பிரிவிலும், பின்னடைவுப் பணியிடங்களிலும் நியமிக்கப்பட்டவர்களை இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்களாக கணக்கிட்டது.
அதனால், இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு கிடைக்க வேண்டிய காவல் சார் ஆய்வாளர் பணி பறிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஆள்தேர்வு அமைப்புகள் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் அடுத்தடுத்து ஏற்படும் குழப்பங்களைப் பார்க்கும்போது, கடந்த காலங்களில் இந்த அமைப்புகள் இடஒதுக்கீட்டு விதிகளை முறையாகப் பின்பற்றியதா என்ற ஐயம் எழுகிறது.
எனவே, கடந்த காலங்களில், குறிப்பாக 69 சதவீத இடஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, ஒவ்வொரு ஆள்தேர்விலும் அந்த இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக, உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஆணையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.