தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கிளவிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பசாமி – கிருஷ்ணம்மாள். இத்தம்பதிக்கு 5 மகன்கள், 2 மகள்கள். 7 பிள்ளைகள் மூலமாக மொத்தம் 20 பேரன், பேத்திகள் உள்ளனர்.
அவர்களுக்கு திருமணமாகி மொத்தம் 24 பூட்டன் – பூட்டிகள் உள்ளனர். இவர்கள் அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், தொழிலதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பசாமி, உடல்நலக் குறைவினால் இறந்துவிட்டார்.

இந்த நிலையில் 4 தலைமுறைகளைக் கண்ட கிருஷ்ணம்மாள் பாட்டி, தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இந்தப் பிறந்தநாள் நிகழ்ச்சியில் அவரின் பிள்ளைகள், உறவினர்கள், பேரன், பேத்திகள், பூட்டன் – பூட்டிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடி மூதாட்டி கிருஷ்ணம்மாளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் கிருஷ்ணம்மாளுடன் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கமகம கறி விருந்தும் நடைபெற்றது.
“எங்களுக்கும் எவ்வளவு சொந்தம் இருக்கிறது என்பதனை தங்களுடைய பாட்டியின் பிறந்தநாள் விழா எடுத்துக்காட்டியுள்ளது.
எங்களது ஒவ்வொரு சொந்தங்களும் தமிழகத்தில் பல்வேறு ஊர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்த நிலையில் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் பார்த்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாட்டியின் பிறந்தநாள் விழாவில் எல்லோரும் ஒருங்கிணையை வேண்டும் என்று நினைத்தோம். அது சாத்தியமாகி உள்ளது.

நான்கு தலைமுறை கண்ட எங்களுடைய பாட்டி அடுத்ததாக எங்களுடைய ஐந்தாவது தலைமுறையும் காணத் தயாராகியிருக்கிறார்” என, மகிழ்ச்சியோடு கிருஷ்ணம்மாளியின் பேரக்குழந்தைகள் கூறினர்.
”அந்தக் காலத்து சிறுதானிய சாப்பாடுதான் என்னோட ஆரோக்கியத்திற்குக் காரணம். என்னோட 7 பிரசவமும் சுகப்பிரசவம்தான். இது வரைக்கும் ஆஸ்பத்திரி பக்கம் போனதே இல்ல. எல்லாமே நாட்டு மூலிகை கை வைத்தியம்தான்.
இன்னும் 10 வருடம் கூட ஆரோக்கியமாக இருப்பேன். யார் மீதும் வெறுப்புக் காட்டாமல், கோபம், பொறாமையைத் தவிர்த்து வாழ்ந்தாலே நலமுடனும் வளமுடனும் வாழலாம்” என நெகிழ்ந்தார் கிருஷ்ணம்மாள் பாட்டி.