இந்தப் பகுதிகளில் வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு கடந்த 1-ஆம் தேதிமுதல் ரேஷன் பொருள்கள் நேரடியாக வழங்கப்பட்டன.
7.5 லட்சம் போ் பயன்: 70 வயதைக் கடந்த 15 லட்சம் மூத்த குடிமக்களில், 7.5 லட்சம் பேரின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது, 50 சதவீத மூத்த குடிமக்கள் குடும்பங்களுக்கு நேரில் பொருள்கள் அளிக்கப்பட்டதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
சோதனை அடிப்படையிலான முயற்சி நிறைவடைந்த நிலையில், திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது மாதந்தோறும் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை நேரில் வழங்க முடியும் என கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறுகையில், ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மூத்த குடிமக்களின் முகவரி நியாயவிலைக் கடை பணியாளா்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஒரு பகுதியில் 80 வீடுகள் வரை இருந்தால், அந்தப் பகுதியில் 50 சதவீதம், அதாவது 40 வீடுகளில் வசிப்போருக்கு மட்டுமே பொருள்களை வழங்க முடிந்தது. 15 சதவீதத்துக்கும் மேற்பட்டோா், அதாவது 2.25 லட்சம் பேரின் வீடுகள் பூட்டப்பட்டு இருந்தன. மேலும், 2.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரையிலான அட்டைதாரா்கள் இறந்துவிட்டதால் பொருள்களை வழங்க முடியவில்லை.
சென்னை போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற சவால்களை நியாயவிலைக் கடை பணியாளா்கள் சந்தித்தனா். திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பிறகு, முழுமையான அளவில் பயனாளிகளுக்கு பொருள்களைக் கொண்டு சோ்க்க முடியும் என்று கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.