8 குடும்பங்களை ஊரை விட்டு விலக்கி வைத்த விவகாரம்: தென்காசி ஆட்சியருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் | Human Rights Commission notice to Tenkasi Collector over eviction of 8 families

1353341.jpg
Spread the love

தென்காசி: தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பகுதியில் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் 8 குடும்பங்களை ஊரை விட்டு விலக்கி வைத்த விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக 2 வார காலத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பகுதியில் 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஊர் கட்டுப்பாடுகள் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த குடும்பங்களை ஊரை விட்டு விலக்கி வைக்கப்பதாக கடந்த சில ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் சாம்பவர்வடகரை கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரை இடப் பிரச்சினை காரணமாக ஊரை விட்டு விலக்கி வைத்து, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவரிடம் பேசிய நபரையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து, ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோல் கலப்பு திருமணம் செய்த குடும்பத்தையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனர். இவ்வாறாக ஊர் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக 8 குடும்பங்களை ஊர் நாட்டாமை வெங்கடேஷ் என்பவர் ஊரை விட்டு விலக்கி வைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவ்வாறு ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதால் தங்களுடன் ஊர் மக்கள் பேசுவதற்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அப்பகுதியில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்குவதற்கும் இடையூறுகள் ஏற்படுகிறது என கூறி பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மாதம் 20-ம் தேதி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து உரிய அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இது தொடர்பான தகவல்களும் புகைப்படங்களும் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளியாகின.

இந்நிலையில், இந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு, இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக 2 வார காலத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தென்காசியில் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் 8 குடும்பங்களை விலக்கி வைத்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *