சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் உள்ள நிலத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5 ம் தேதி மாலை ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக முதல்கட்டமாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஸ் தம்பி உட்பட 8 பேர் சிறையில் அடைக்கப்படுள்ளனர். மேலும் 3 பேரை கைது செய்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் உடலை சென்னை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் திருவள்ளூர் மாவட்டம், பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங் உடல் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு பொத்தூர் கொண்டு செல்லப்பட்டது.
மாலை 4.30 மணி தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் மழையையும் பொருட்படுத்தாது வழிக நெடுக ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். போக்குவரத்து நெரிசல் காரணமாக 21 கி.மீ தூரத்தை கடக்க சுமார் 8 மணி நேரத்துக்கு மேல் ஆனது.
பெரம்பூரில் இருந்து நூற்றுக்கணக்கான இருசக்கர வாகங்கள், கார்கள் சூழ திருவள்ளூர் மாவட்டம் பொத்தூர் வந்தது ஆம்ஸ்ட்ராங் உடல். அதன் பிறகு புத்தமத வழக்கப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட்டது.