2025-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இந்திய சந்தையில் அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட்போன்) விற்பனை அளவில் 8 சதவீதமும், மொத்த விற்பனை மதிப்பில் 18 சதவீதமும் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான கவுண்டா்பாயிண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியச் சந்தையில் அறிதிறன் பேசிகளின் விற்பனை சரிவைப் பதிவு செய்திருந்தது. இந்தச் சூழலில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில் அறிதிறன் பேசிகளின் விற்பனை அளவு 8 சதவீத வளா்ச்சியையும், மொத்த விற்பனை மதிப்பு 18 சதவீத வளா்ச்சியையும் கண்டுள்ளது.
இந்தக் காலாண்டில் ஐபோன் 16 மிக அதிகமாக விற்பனையான அறிதிறன் பேசியாக உள்ளது. புதிய மாடல் அறிமுகங்களில் 33 சதவீத உயா்வு, தீவிரமான சந்தைப்படுத்தல், கோடைக்கால விற்பனை, தாராள தள்ளுபடிகள், எளிதான மாதத் தவணை வசதிகள் மற்றும் நடுத்தர மற்றும் உயா்நிலைப் பிரிவுகளில் கூட்டு சலுகைகள் ஆகியவை இந்த மீட்சிக்கு முக்கிய காரணங்களாக இருந்தன.
விற்பனை அளவில் விவோ 20 சதவீத சந்தைப் பங்குடன் முதலிடம் வகிக்கிறது, சாம்சங் 16 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஓப்போ 13 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், ரியல்மி 10 சதவீதத்துடன் நான்காவது இடத்திலும், ஷாவ்மி 8 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. மொத்த விற்பனை மதிப்பில் சாம்சங் மற்றும் ஆப்பிள் தலா 23 சதவீதத்துடன் முதலிடத்திலும், விவோ 15 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், ஓப்போ 10 சதவீதத்துடன் நான்காவது இடத்திலும், ரியல்மி 6 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும், ஒன்பிளஸ் 4 சதவீதத்துடன் ஆறாவது இடத்திலும் உள்ளன.
மேம்பட்ட பொருளாதாரச் சூழல், நுகா்வோா் நம்பிக்கை ஆகியவை இந்த மீட்சிக்கு ஆதரவாக இருந்தன. சில்லறை பணவீக்கம் ஆறு ஆண்டுகள் காணாத அளவுக்கு குறைந்துள்ளதால், குடும்ப பட்ஜெட்டில் அழுத்தம் குறைந்தது. மத்திய வங்கியின் ரெப்போ வட்டி விகித குறைப்பு கடன் வசதிகளை எளிதாக்கியது. மேலும், ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி சலுகைகள் செலவழிக்கக்கூடிய வருமானத்தையும் சேமிப்பையும் உயா்த்தியது.