விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவு இன்று(10-ந்தேதி) நடைபெற்றது. 276 வாக்குப்பதிவு மையங்களிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
இதில் 42 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானதாகவும், 3 மையங்கள் மிக பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
பலத்த பாதுகாப்பு
காலை முதலே வெயிலையும் பொருட்படுத்தாமல்பொதுமக்கள் நீண்டவரிசையில் நின்று வாக்களித்தனர்.காலை 7.10 மணிக்கு அன்னியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 42-வது வாக்குச்சாவடியில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, தனது மனைவி வனிதா, தந்தை அரிபுத்திரியுடன் வந்து வாக்களித்தார்.
பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி காலை 9.10 மணிக்கு வாக்கை பதிவு செய்தார். மிகவும் பதற்றமான வாக்குப்பதிவு மையங்களாக அடையாளம் காணப்பட்ட ராதாபுரம், குண்டலப்புலியூர், பனையபுரம் கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
பெண்ணுக்கு கத்திக்குத்து
அனுமந்தபுரத்தை அடுத்த டி கொசப்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தில் ஓட்டுப்போட காத்திருந்த கனிமொழி என்ற பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது. கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் சூழலில் அவரை கத்தியால் குத்திய முன்னாள் கணவர் ஏழுமலை என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.காயம் அடைந்த கனிமொழிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
82.48% வாக்குகள் பதிவு
இந்த நிலையில் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்தது. மொத்தம் 1 லட்சத்து 95 அயிரதம்495 பேர் வாக்களித்து உள்ளனர்.விக்கிரவாண்டி தொகுதியில் மொத்த வாக்கார்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 பேர் ஆகும்.
நடந்து முடிந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் 82.48 ஆகும். ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எண்ணும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை வருகிற 13 ந்தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.