`9 நாள்களுக்குப் பிறகு தகனம் செய்யப்பட்ட மாணவியின் உடல்’ – கண்ணீரில் வேடநத்தம் கிராமம்!

Spread the love

தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவியின் உடல் இன்று பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவர்கள், உறவினர்கள், ஊர்ப் பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு தகனம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகிலுள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, கடந்த 10-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் 11-ம் தேதி மதியம் சுமார் 2 மணியளவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்டு உறவினர்கள், ஊர்ப் பொதுமக்கள் தூத்துக்குடி – மதுரை நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், போலீஸாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு நெடுஞ்சாலையில் போராடத்தைக் கைவிட்டு ஊருக்குள் போராட்டத்தை தொடர்ந்தனர். 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பல கட்ட விசாரணைக்குப் பிறகு சந்தேகிக்கும் படியான 5 பேரின் டி.என்.ஏ பரிசோதனைக்குப் பிறகு, ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

குற்றவாளி கைது செய்யப்பட்டதையடுத்து, 9 நாள்களுக்குப் பிறகு இன்று, தூத்துக்குடி அரசு மருத்துமனையில் இருந்து மாணவியின் உடலை பெற்றோர், உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். அரசு மருத்துவமனையில் இருந்து வேடநத்தம் வரை போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மாணவியின் உடல், அவரின் இல்லத்தின் முன்பு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அம்மாணவியுடன் படித்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், ஊர்ப் பொதுமக்கள், பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

“நல்லாப் படிக்கிறப் புள்ளய இப்படி சீரழிச்சுக் கொண்டுட்டானே.. மனுச மிருகம் அவன்.. எந்தப் பொம்பளப் பிள்ளைக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாதுய்யா.. கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டணை கிடைக்கணும்.” என, வயதான மூதாட்டி ஒருவர் உரத்த குரலில் கூறி அழ, அனைவரின் கண்களிலும் கண்ணீர் ததும்பியது. இறுதி அஞ்சலியில், அமைச்சர் கீதாஜீவன், தி.மு.க., எம்.எல்.ஏ மார்கண்டேயன், அ.தி.மு.க எம்.எல்.ஏ., கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அனைவரின் அஞ்சலிக்குப் பிறகு அந்த கிராமத்தில் உள்ள எரிதகன மேடைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

வழக்கமாக, கிராமப் பகுதிகளில் சாதாரண இறப்பு துக்க நிகழ்வு என்றாலே, பெண்கள் வீதியோடு நின்றுவிடுவார்கள். எரிதகன மேடை வரை வந்து இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்து கொள்வதில்லை. ஆனால், மாணவியின் இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்க 100-க்கும் மேற்பட்ட பெண்கள், எரிமேடை வரையிலும் ஊர்வலமாக வந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதிலும், எந்த சலனமும் இல்லாமல் நடந்து முடிந்தது மாணவியின் அடக்கச் சடங்கு.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *