90 ஐஏஎஸ் அதிகாரிகளில் 3 பேர் மட்டுமே ஓபிசி வகுப்பினர்: ராகுல் காந்தி!

Dinamani2f2024 10 192fg1k2t8xy2fpti10192024000326b.jpg
Spread the love

அதிகாரத்துவத்தில் உள்ள 90 ஐஏஎஸ் அதிகாரிகளில் 3 பேர் மட்டுமே ஓபிசி வகுப்பினைச் சேர்ந்தவர்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக வருகிற நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 20 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அங்கு தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்றுள்ளார். தேர்தல் அறிவிப்பு வெளியானதற்குப் பின் ஜார்க்கண்டிற்கு ராகுல் சென்றுள்ள முதல் பயணம் இதுவாகும்.

முன்னதாக, வரவிருக்கும் ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி இணைந்து போட்டியிடும் என்றும், காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் மொத்தமுள்ள 81 இடங்களில் 70 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாகவும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்திருந்தார்.

பிரசார மேடையில் கூட்டணி கட்சியினருடன் ராகுல் காந்தி

பிராசரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

“பாஜக அனைத்து நிதி மற்றும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால், காங்கிரஸ் நேர்மையை மட்டுமே முன்வைத்துள்ளது. முன்னதாக மக்களவைத் தேர்தலில் பணம் கொடுக்காமல் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட அனைத்து தரப்பிலிருந்தும் அரசியலமைப்பு தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகிறது. நம்முடைய அரசியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும்.

அதிகாரத்துவத்தில் மொத்தமுள்ள 90 ஐஏஎஸ் அதிகாரிகளில் வெறும் 3 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கும் சிறிய துறைகளே ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் , நிதித் துறையில் பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், பழங்குடியினர் என ஒருவர் கூட சேர்க்கப்படவில்லை

பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்டவர்களையும், தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்களை தான் மிகவும் மதிப்பதாகக் கூறுகிறார். ஆனால், அவர்களுடைய உரிமைகளைப் பறித்துக் கொள்கிறார். அவர் உங்களுக்கு மரியாதை கொடுத்து, உங்களை நிறுவனங்களிலிருந்து வெளியேற்றுகிறார்” என ராகுல் தெரிவித்தார்.

இதையும் படிக்க | ஜார்க்கண்ட் தேர்தல்: பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் சம்பயி சோரன்..!

மேலும், “பாஜகவினர் பழங்குடியினரை வனவாசிகள் என்று அழைக்கையில், ​​அவர்கள் என்ன சொல்ல முயல்கிறார்கள்? பல்லாயிரம் ஆண்டுகளாக நீங்கள் பின்பற்றி வரும் உங்களின் வாழ்க்கை முறையை, வரலாற்றை, அறிவியலை அழிக்க முயல்கிறார்கள். ஆதிவாசி என்றால் முதல் உரிமையாளராக இருந்தவர்கள், வனவாசி என்றால் காட்டில் வசிப்பவர்கள். எப்போது முதல் இந்த வார்த்தைப் பயன்படுத்தப்படுகிறது. இது வெறும் வார்த்தையல்ல. உங்கள் முழு வரலாறு.

நான் இந்தியாவின் கல்வி முறையில் படித்தேன். அதில், பழங்குடியினரைப் பற்றி 10-15 வரிகள் மட்டுமே இருக்கும். அவர்களின் வரலாறு என்ன, அவர்களின் வாழ்க்கை முறை என்ன என்று எதுவும் சேர்க்கப்படவில்லை.

உங்களுக்காக பிற்படுத்தப்பட்டவர் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இதுதான் உங்களின் பெயரா? உங்களைப் பிற்படுத்தப்பட்டவன் என்று யார் சொன்னது? உங்களுக்கான உரிமைகள் வழங்கப்படவில்லை. வரலாறு மறைக்கப்பட்டது. இந்த நாட்டைக் கட்டியெழுப்பிய விவசாயிகள், கூலித்தொழிலாளிகள், தச்சர்கள், முடிதிருத்துபவர்கள், செருப்புத் தொழிலாளிகள் ஆகியோரின் வரலாறு எங்கே?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *