தென்காசி மாவட்டம், கடையம் அருகில் அமைந்துள்ளது பாப்பான்குளம் கிராமம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான இசக்கி, அவர் தி.மு.கவில் இணைந்த போது தி.மு.கவில் இணைந்தார். பின்னர், அ.தி.மு.க என்ற தனிக்கட்சி தொடங்கிய பின்னர், அ.தி.மு.கவிலும் இணைந்து பயணித்து வந்தார்.
இவர், அப்பகுதியில் “எம்.ஜி.ஆர் உணவகம்” என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த உணவகத்தை அ.தி.மு.கவின் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் திறந்து வைத்துள்ளார்.

அந்த உணவகத்திற்குள் நான்கு புறமும், 100-க்கும் மேற்பட்ட எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களை மாட்டி உணவகத்தை ஒரு அருங்காட்சியமாகவே மாற்றி வைத்திருந்தார். இதனால், இவரை ஊர் மக்கள் “எம்.ஜி.ஆர் இசக்கி” என்றே அழைத்து வந்தனர்.
இவர், அ.தி.மு.கவில் முன்னாள் ஒன்றிய அவைத்தலைவராகவும், கவுன்சிலராகவும் பதவி வகித்தாலும் எம்.ஜி.ஆரின் தொண்டன் என்ற மகிழ்ச்சியிலேயே சுழன்று வந்துள்ளார். வயது மூப்பும் காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இசக்கி, நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்து சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பி ஓய்வில் இருந்தார்.