வெறும் ரூ. 3 ஆயிரம் திருடியதற்காகவா? 18 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவர் கைது!

Dinamani2fimport2f20222f52f262foriginal2fmanarrestedinodishaforpostinghatemessagesagainstpmmodi.jpg
Spread the love

ரூ. 3 ஆயிரத்தை திருடிவிட்டு 18 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகேயுள்ள வடுகச்சிமாத்தில் பகுதியைச் சேர்ந்தவர் பி. ராமையா. 41 வயதான இவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ. 3 ஆயிரம் திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2006-ஆம் ஆண்டு, தோனாவூரிலுள்ள வேளாண் கூட்டுறவு சங்கத்தில் கள்ளச்சாவியைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்த ராமையா, அங்கிருந்து ரூ. 2,959 தொகையை களவாடிச் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து, ஏர்வாடி காவல்துறையினர் இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு, ராமையாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

அதைத்தொடர்ந்து, ஒரு சில வாரங்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர், அப்பகுதியிலிருந்து மாயமானதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கடந்த பல ஆண்டுகளாக தேடி வந்த காவல்துறையினரால், பல இடங்களில் தேடியும் ராமையாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

காலங்கள் உருண்டோடிய நிலையில், ராமையாவின் உறவினர்கள் சிலர் சமீபத்தில் திருவண்ணாமலைக்கு சென்றிருந்தபோது, அங்கே சாமியார் அவதாரத்தில் இருந்த ராமையாவைக் பார்த்ததாக உள்ளூரில் தகவல் தெரிவித்துள்ளனர். இதையறிந்த காவல்துறையினர், பல ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட வழக்கை தூசித்தட்டியுள்ளனர்.

உடனடியாக திருவண்ணாமலை சென்ற நான்குநேரி மண்டல காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வி. பிரசன்ன குமார் தலைமையிலான சிறப்புப்படையினர், அங்கே மாறுவேடமணிந்து திரிந்தும், பிளாட்பாரங்களில் உறங்கியும் சிரத்தையெடுத்து ராமையாவின் இருப்பிடத்தைக் கண்டறிந்துள்ளனர்.

காவி உடையில் மௌன சாமியாராக அருளாசி வழங்கிக் கொண்டிருந்த ராமையாவை கையும் களவுமாகப் பிடித்த அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரணைக்காக நான்குநேரிக்கு அழைத்து வந்துள்ளனர். ஏர்வாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 18 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ராமையா, தன்னைத்தானே சாமியாராக பாவித்துக்கொண்டு பல பகுதிகளிலும் வலம் வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ராமையவை கைது செய்துள்ள கூடுதல் கண்காணிப்பாளர் வி. பிரசன்ன குமார் தலைமையிலான சிறப்புப் படையினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *