கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் மேப்பாடி பகுதியைச் சுற்றியுள்ள முண்டக்கை, சூரல்மலா, அட்டமலா, நூல்புழா கிராமங்களில் அடுத்தடுத்து 3 முறை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் அப்பகுதிகள் உருக்குலைந்து போயுள்ளன.
நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மாவட்டத்தில் மீட்புப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. 2-வது நாளாக மீட்புப்பணி தொடருகிறது.
குழந்தைகள், பெண்கள் உள்பட 174 போ் உயிரிழந்துள்ளதாகக் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவுகளில் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்பதால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது.
இதுவரை 160 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், 191 பேரைக் காணவில்லை என்றும் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மேப்பாடி பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் களநிலவரத்தை கண்முன் எடுத்துரைத்துள்ளார்.
அவர் கூறியதாவது, “வயநாட்டில் கடந்த இரு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இங்கு பேரிடர் நிகழ்வதற்கான வாய்ப்பும் அதிகமாகவே இருந்தது.
நிலச்சரிவு நிகழ்ந்த நாளன்று(ஜூலை 29) பகல் வேளையில் பெரிதாக மழை பெய்யவில்லை. ஆனால், மாலை வேளையில் மழை பெய்யத்தொடங்கியது. ஆனால், எந்தவொரு அதிகாரியும் இங்குள்ள மக்களை நிவாரணா முகாம்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தவில்லை.
சம்பவத்தன்று, முதல் நிலச்சரிவு ஏற்படும்போது, ‘ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது’ ஏற்படும் அதிர்வைப் போன்றதொரு நிலமை.. இதைத் தொடர்ந்து, நாம் இங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டுமென எனது மகன் அறிவுறுத்தினார்.
எங்கள் அண்டை வீட்டாரை அழைத்து இதுகுறித்து தெரிவித்தோம். ஆனால், அவர்களோ இதனால் பெரும் பாதிப்பு உண்டாகாது என்று அலட்சியமாக இருந்தனர். அதனால் அவர்கள் யாரும் இங்கிருந்து வெளியேற விரும்பவில்லை. இதையடுத்து இங்கிருந்து வெலியேறிய நாங்கள், வெளியேறிக் கொண்டிருக்கும்போதே எங்கள் மீது நிலம் சரிந்து விழுவதை உணர்ந்தோம்.”
“மீட்புப்பணியின்போது எங்கள் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கணவனும் மனைவியும், ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்தபடி மண்ணில் புதைந்து கிடந்ததைக் கண்டபோது கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.. அவர்களது கைகளைப் பிரித்தபின்பே, இருவரது உடல்களையும் மீட்க முடிந்தது.
மண்ணில் சிக்கியிருந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த 5 வயது சிறுமியை என்னால் பத்திரமாக மீட்க முடிந்தது. அப்போது அவரது தாயார் எனது பெயரை உச்சரித்து உதவும்படி கூக்குரலிட்டார். உடனடியாக அவரையும் பத்திரமாக மீட்க கடினமாக முயற்சித்தேன், ஆனால், தனியொரு ஆளாக என்னால் அவரை மீட்க முடியாமல் போனது” என்று கண்ணீருடன் கூறியுள்ளார் ஸ்டீபன்.
ஸ்டீபனின் அண்டை வீடுகளைச் சேர்ந்தவர்களும், அவரது சகோதரிகளும் இந்த இயற்கைப் பேரிடரில் உயிரிழந்துள்ளனர்.