சென்னையில் ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை

Comm Arun
Spread the love

சென்னையில் கடந்த 5-ந் தேதி இரவு பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக போலீசார் 11 பேரை கைது செய்து இருந்தாலும் அவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று அரசியல் கட்சியினரும் ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்களும் தெரிவித்து போலீசார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறிவருகிறார்கள்.

கமிஷனர் மாற்றம்

இந்த நிலையில் சென்னை நகர போலீஸ்கமிஷராக இருந்த சந்தீப்ராய் ரத்தோர் இன்று அதிரடியாக மாற்றப்பட்டு புதிய கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டார். அவர் இன்று(8ந்தேதி) மதியம் சென்னை போலீஸ்கமிஷனராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து கமிஷனர் அருண் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது&
நான் சென்னையில் ஏற்கெனவே பல்வேறு இடங்களில் துணை ஆணையர், இணை ஆணையர் என சட்டம் ஒழுங்கிலும், போக்குவரத்து பிரிவிலும் பணிபுரிந்துள்ளேன். எனவே, சென்னை எனக்கு புதிது இல்லை. காவல் ஆணையர் பதவியை மற்றொரு முக்கிய பொறுப்பாக பார்க்கிறேன்.

Comissoner Arun

ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை

ரவுடியிசத்தை கட்டுப்படுத்துவது, காவல் துறையில் உள்ள லஞ்ச விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது, கட்டப்பஞ்சாயத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து பணிபுரிவேன்.
சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று எதன் அடிப்படையில் கூறப்படுகிறது? காலங்காலமாக குற்றங்கள் நடப்பதும், அதை காவல் துறை தடுப்பதும் நடந்து வருகிறது. புள்ளி விவரங்கள்படி பார்த்தால் 2022, 2023-ஆம் ஆண்டுகளில் குறைவான கொலை சம்பவங்களே நடந்திருக்கிறது. இருப்பினும் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதைச் செய்வோம்.

ரவுடிகளுக்கு புரியும் மொழியில்

1275833.jpg

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து தற்போது கருத்து சொல்ல முடியாது. நான் இப்போது தான் வந்து இருக்கிறேன் இதுபற்றி விசாரித்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியில் பதிலளிப்போம்.
சென்னையில் போக்குவரத்து பிரிவில் இதற்கு முன்பு நான் பொறுப்பு வகித்திருக்கிறேன். சென்னையில் போக்குவரத்து சிக்கல்களும் இருக்கிறது. அவற்றையும் களைய நடவடிக்கை எடுக்கப்படும். காவல் ஆணையராக பொறுப்பு அளித்த அரசுக்கும், முதல்வருக்கும் நற்பெயர் ஏற்படுத்தும்படி சட்டம் -ஒழுங்கை காப்பாற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

நான் வருவேன்.. மணிப்பூருக்கு 3வது முறையாக சென்ற ராகுல் காந்தி..

யார் இந்த அருண்?

தமிழக காவல் துறையில் 1998-ஆம் ஆண்டு அருண் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணிக்கு சேர்ந்தார். இவர் சென்னை பல்கலைக் கழகத்தில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பும், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காவல் துறை மேலாண்மை பிரிவில் பட்டய படிப்பும் படித்துள்ளார்.
ஐபிஎஸ் பயிற்சி முடித்த பிறகு நாங்குநேரி, தூத்துக்குடி ஆகிய உட்கோட்டங்களில் உதவி காவல் கண்காணிப்பாளராக (ஏஎஸ்பி) பணியாற்றினார். பின் கரூர், கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்பி) பணியாற்றி வந்த இவர் பின்னர், சென்னை அண்ணா நகர் மற்றும் பரங்கிமலை ஆகிய இடங்களில் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், தமிழ்நாடு குற்ற புலனாய்வுத் துறையில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய நிலையில் 2012-ல் காவல் துறை டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக காவல் துணை தலைவரானார்.
அதன் பிறகு சென்னை மாநகரில் போக்குவரத்து மற்றும் சட்டம் – ஒழுங்கு இணை ஆணையராகவும், அதனை தொடர்ந்து, 2016-ம் ஆண்டு காவல் துறை ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராகவும், 2021-ம் ஆண்டு மீண்டும் திருச்சி மாநகர காவல் ஆணையராக இரண்டாவது முறையாக பொறுப்பு வகித்தார்.
2022-ம் ஆண்டு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையராகவும், கடந்த ஆண்டு சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும் பொறுப்பேற்றார். தற்போது அருண் சென்னை மாநகர போலீஸ்கமிஷனராக பொறுப்பேற்று உள்ளார். அவரது செயல்பாடு மற்றும் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். பொறுத்து இருந்து பார்க்கலாம்…

ஜாபர் சாதிக்கின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல: உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம்Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *