சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 5&ந்தேதி பெரம்பூர் பகுதியில் புதிதாக கட்டி வரும் வீட்டின் அருகே நின்ற போது மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். உணவுடெலிவரி ஊழியர்கள் போல் வந்த மர்ம நபர்கள் கொலையை அரங்கேற்றி விட்டு அங்கிருந்து தப்பிசெல்லும் வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பழிக்கு பழியாக
இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே கொலையுண்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேசின் தம்பியான பொன்னை பாலு மற்றும் அவரது கூட்டாளிகள் திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். ஆற்காடு சுரேசின் கொலைக்கு பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தினந்தோறும் வந்த வண்ணம் உள்ளன. ரவுடி கும்பல் அனைவரும் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.
ரவுடி என்கவுண்டர்
இந்த கொலை யில் கைதான முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான் இதற்கிடையே கொலையில் தொடர்புடையதாக முன்னாள் பா.ஜனதா நிர்வாகியான அஞ்சலையும் சிக்கினார்.
அரசியல் கட்சியினரும் இதில் சிக்கி வருவதால் வழக்குவிசாரணையில் தொடர்ந்து பரபரப்பான நிலை நீடித்து வருகிறது. இதனால் ஆம்ஸ்ட்ராங் கொலையில் துருப்பு சீட்டாக இருந்தது யார்? கொலையாளிகளை ஒருங்கிணைத்து ஏவியது யார்? என்ற முடிவுக்கு போலீசார் வரவில்லை. தனிப்படை போலீசாரின் விசாரணை வளையம் தினந்தோறும் விரிந்து வருகிறது. தோண்டத்தோண்ட புதிது புதிதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் ஒருவர் கைது
ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்து கொலையில் சம்பந்தப்பட்ட திருவள்ளூர் மாட்டம் கடம்பத்தூரை சேர்ந்த ஹரிதரன்(37) என்பவரை இன்று கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட ஹரிதரன் வழக்கறிஞராக பணியாற்றி வருவதும், இவர் அ.தி.மு.க. கட்சியில் கடம்பத்தூர் ஒன்றிய குழு உறுப்பினராக உள்ளதும் தெரியவந்தது. இவர் ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன் மற்றும் அருளின் நெருங்கிய நண்பர் ஆவார்.
ஆற்றில் செல்போன்கள் வீச்சு
இதனால் ஆம்ஸ்ட்ராங் கொலையில் குற்றவாளிகள் பயன்படுத்திய 6 செல்போன்களை அவர்கள் மேற்படி ஹரிதரனிடம் ஒப்படைத்து உள்ளனர். அவர்கள் கூறியபடி ஹரிதரன் 6 செல்போன்களையும் உடைத்து சேதப்படுத்தி திருவள்ளுவர் மாவட்டம், வெங்கத்தூரில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் வீசி எறிந்துள்ளார். பின்னர் எதுவும் தெரியாதது போல் சென்று விட்டார்.
போலீசாரின்விசாரணையில் செல்போன் பற்றி தகவல்கிடைத்ததும் அதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தனிப்படை போலீசார் தமிழ்நாடு தீயணைப்பு துறையைச் சேர்ந்த நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்களின் உதவியுடன் கொசஸ்தலை ஆற்றில் படகில் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ஹரிதரன் செல்போன்களை வீசியதாக கூறிய இடத்தில் நீச்சல் வீரர்கள் மூழ்கி சென்று தீவிரமாக தேடினர்.
3 செல்போன்கள் மீட்பு
நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி கிடந்த 3 செல்போன்கள் மீட்கப்பட்டது. மற்ற செல்போன்களையும் கண்டுப்பிடிக்க மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கைதான ஹரிதரனை போலீசார் இன்று (20.07.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் இன்னும் சிலர் சிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான கடம்பத்தூர் ஒன்றிய கவுன்சிலர் ஹரிதரன் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அ.தி.மு.க.வின் கொள்கைகள், குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாகக் கூறி, ஹரிதரனை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.