அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் விஜய் தலைமையில் தவெக-வில் இணைந்தார். சென்னையிலிருந்து கோபிசெட்டிபாளையத்துக்கு வந்த செங்கோட்டையனுக்கு தவெகவினர் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். அப்போது, செங்கோட்டையன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாகத் தாக்கிப் பேசினார். இந்நிலையில், தனது பிரசாரப் பயணத்தின் ஒரு பகுதியாக எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட கூட்டம் கோபிசெட்டிபாளைத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒருவரைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தேர்தலின்போது வாக்கு கேட்டு வந்தாரே, ராஜினாமா செய்வது குறித்து மக்களிடம் கேட்டாரா? மக்கள் கவலைப்பட வேண்டாம். எடப்பாடி தொகுதியைவிட கோபிசெட்டிபாளையம் தொகுதியை அதிமுக ஆட்சியில் உயர்த்துவோம். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக அதிமுக அரசைப் பாராட்டி விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம் பெறவில்லை என்று செங்கோட்டையன் அதைப் புறக்கணித்தார். இன்று யார் புகைப்படத்தை வைத்துக்கொண்டு தவெக-வில் இணைந்துள்ளார். அவர் எங்கிருந்தாலும் வாழ்க.

கோபிசெட்டிபாளையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் செங்கோட்டையன் கலந்துகொண்ட மாணவர்களுக்கான சைக்கிள் வழங்கும் விழாவில் எம்ஜிஆர் படமும் இல்லை. ஜெயலலிதா படமும் இல்லை. அதற்கு அவர் என்ன சொல்லப் போகிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்.ஆனால், அதையும் மீறி நீக்கப்பட்டவர்களுடன் சேர்ந்துகொண்டு அவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என தலைமைக்கு 10 நாள் கெடு விடுத்தார். அதனால்தான், அவரது பொறுப்பை எடுத்தோம். அப்போதாவது திருந்துவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர் திருந்தியபாடில்லை. சீனியர் என்பதால் கண்டுகொள்ளாமல் இருந்தோம். உச்சமாக தேவர் ஜெயந்தியன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்ஸை சந்தித்தார். அதனால்தான் தலைமைக்கழக நிர்வாகிகளுடன் பேசி, செங்கோட்டையனை நீக்கினோம். கடந்த மூன்று ஆண்டுளாக கட்சிக்குள் இருந்து கொண்டு துரோகம் செய்தவர் செங்கோட்டையன்.