இந்தப் போராட்டம் தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் தேசியச் செயலாளர் கிருஷ்ணா ஹரி, பீகார் மாநிலச் செயலாளர் குந்தன் யாதவ், உபி மாநிலத் துணைத் தலைவர் அஜய் குமார், தேசிய ஒருங்கிணைப்பாளர் நரசிம்ம யாதவ் ஆகிய நான்கு முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் முதலில் கருப்பு குடைகளில் ஸ்டிக்கர் ஒட்டி, அரங்குக்குள் நுழையத் திட்டமிட்டதாகவும், பாதுகாப்பு காரணங்களால் குடைகள் பறிமுதல் செய்யப்படும் என்பதால், சட்டையில் ஸ்டிக்கர் ஒட்டி வந்து பின்னர் அதைக் கழற்றிப் போராடியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு மத்திய அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், “இந்தியா உலகளாவிய தொழில்நுட்ப சக்தியாக உருவெடுக்கும் வேளையில், காங்கிரஸ் நாட்டை அவமானப்படுத்துகிறது. இது அரசியல் எதிர்ப்பு அல்ல, இந்தியாவின் பிம்பத்தைச் சிதைக்கும் சதி.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “நாடு முன்னேறிச் செல்லும் இந்த நேரத்தில் அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும். இளைஞர் காங்கிரஸின் செயல் கண்டிக்கத்தக்கது.” எனத் தெரிவித்திருக்கிறார்.