Air pollution: மூச்சுவிட திணறும் டெல்லி; தூய காற்றுக்கு ஏங்கும் மக்கள்! – பிரச்னைகளும் தீர்வும்!

Spread the love

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று அதிக அளவில் மாசுபட்டு வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக குளிர்காலத்தில் தொடர்ச்சியாக காற்று மாசுபாடு உச்சத்தைத் தொட்டு வருகிறது.

டெல்லியில் காற்று மாசுபாடு அபாயகர அச்சுறுத்தலால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் “50 விழுக்காடு பணியாளர்கள் மட்டுமே நேரடியாக வந்து பணியாற்ற வேண்டும்.

மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும்” என உத்தரவிடும் அளவு, சூழல் கைமீறிக்கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே டெல்லி அரசு பள்ளிகளில் குழந்தைகளின் வகுப்பறைக்கு வெளியிலான விளையாட்டு முதலான செயல்பாடுகளுக்கு தடை விதித்திருக்கிறது.

Delhi air pollution
Delhi air pollution

இந்த சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர, காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக ஒட்டுமொத்த தேசிய தலைநகரிலிருந்தும் (NCR) தரவுகளைச் சேகரித்து, சராசரி காற்றுத் தரக் குறியீடு (AQI) மற்றும் வானிலை அடிப்படையில், பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள மற்ற அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது.

காற்றுத் தரக் குறியீடு (AQI) 201 – 300-க்குள் இருக்கும்போது GRAP 1 கட்டுப்பாடுகளும், 301 – 400-க்குள் இருக்கும்போது GRAP 2 கட்டுப்பாடுகளும் அமலுக்கு வரும்.

அதேசமயம், 401 – 450-க்குள் இருக்கும்போது GRAP 3, காற்றுத் தரக் குறியீடு 451-ஐத் தாண்டும்போது GRAP 4 கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இப்போது டெல்லியில் GRAP 3 கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது.

காற்றுமாசை கட்டுப்படுத்த ஆளும் பா.ஜ.க அரசு முயன்றுவருகிறது. குறிப்பாக செயற்கை மழையை வரவைப்பது, தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளது.

Delhi air pollution
Delhi air pollution

ஆனால் காற்று மாசுபடுவதைத் தடுக்க நிரந்தர தீர்வு காணாமல், இது போன்று தற்காலிக நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சில தினங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறைக்கும் போராட்டக்காரங்களுக்கும் மத்தியில் தள்ளுமுள்ளுகூட ஏற்பட்டது.

எனவே, பெரும் துயரை ஏற்படுத்தும் காற்றுமாசு தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜனிடம் பேசினோம். அவர், “ அறுவடைக்குப் பிறகு, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீதமுள்ள பயிர் கழிவுகளை எரிக்கிறார்கள். அதனால்தான் காற்றுமாசுபாடு ஏற்படுகிறது என அரசு பழியை குறிப்பிட்ட மாநிலங்கள் மீது சுமத்துகிறது. அது மட்டும் காரணம் அல்ல.

அரசின் நடவடிக்கையில் பெரிய போதாமை இருக்கிறது. இந்த காற்று மாசுக்கான முக்கியப் பிரச்னை அதிக வாகனப் பயன்பாடு, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள், கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள், பெரும் குப்பை எரியூட்டுதல் போன்றவைதான் காரணம்.

Delhi air pollution
Delhi air pollution

இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது வாகனப் பயன்பாடு. அதாவது சென்னை, மும்பை, கல்கத்தா என மூன்று நகரத்தில் இருக்கும் அளவுக்கான வாகனங்கள் டெல்லியில் பயன்பாட்டில் இருக்கிறது.

அடுத்தடுத்த இடங்களில்தான் வெப்ப மின் நிலையங்கள், கழிவிலிருந்து மின் உற்பத்தி செய்யும் ஆலைகள், குப்பையை எரிக்கக்கூடிய உலைகள், சமீபத்தில் பட்டாசு வெடித்துக்கொண்டாடப்பட்ட தீபாவளி எனக் காரணங்களை வரிசைப்படுத்தலாம்.

இது எல்லாம் சேர்த்துதான் இப்போது இருக்கும் பிரச்னைக்கு காரணம். குளிர்காலத்தில் காற்று இடம்பெயர்வது மிக மிகக் குறைவு என்பதால், ஒவ்வொரு குளிர்காலத்திலும் டெல்லி தவிக்கிறது.

முதலில் டெல்லிவாசிகள் வாகனப் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும். அன்றாடப் பணிகளுக்கு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். ஒரு பெரிய காரில் ஒருவர் மட்டுமே பயணிக்கும் சூழல் இருந்தால் அதை முற்றிலுமாக தவிர்க்கலாம்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன்
பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன்

அதற்கு அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது இடங்களில் பார்க்கிங் வசதிக்கான தொகையை அதிகரிப்பது, பொதுப் போக்குவரத்துக்கான சலுகைகளை வழங்குவது போன்ற நடவடிக்கையை எடுக்கலாம்.

அதனால் மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத்து பயன்பாடு அதிகரிக்கும். அதே நேரம், அரசு செயல்படுத்தும் இரட்டை/ஒற்றை வாகன எண் திட்டம் போன்ற திட்டங்கள் எல்லாம் பெயருக்கு மட்டுமே. அதனால் எந்தப் பலனும் கிடைக்காது.

காற்று மாசை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மொத்தமாக மூடவோ அல்லது ஊருக்கு வெளியில் அமைக்கவோ உறுதியாக உத்தரவிடலாம்.

மக்கள் தங்களின் குப்பை மேலாண்மையைக் சரியானப் பின்பற்றி, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிப்பது போன்ற நிலையை தவிர்க்க வேண்டும்.

தீபாவளிப் பட்டாசு வெடிப்பது முக்கியமான கொண்டாட்டமாக பார்க்கப்படுகிறது. ஆனால், டெல்லியில் பா.ஜ.க ஆட்சி வருவதற்கு முன்புவரைக் கூட, தீபாவளிப் பட்டாசு வெடிப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு அது முழுதுமாக தகர்க்கப்பட்டது.

Delhi air pollution
Delhi air pollution

நம் சென்னையிலேயே தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றுப் பாருங்கள். சிறு குழந்தைகள் மாஸ்க் அணிந்துகொண்டு சிகிச்சைக்கு வந்திருப்பார்கள். அப்படியானால் டெல்லியில் கற்பனை செய்து பாருங்கள். டெல்லியில், தீபாவளி முடிந்த மறுநாள் காற்றின் தரக்குறியீட்டில் 2000 இருந்தது. அதாவது 89 சிகரெட் புகைத்ததற்கு சமமான காற்று மாசு அது.

டெல்லி மக்கள் அந்த அளவுக்கு மோசமான புகையை சுவாசித்தார்கள். அவங்களின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படும். அவர்களின் வாழ்நாளில் ஏழு ஆண்டுகள் குறையும். வாகன மாசுபாட்டைக் குறைப்பதில் கவனம் செலுத்துவது,தொழில்துறை அளவில் தொழிற்சாலைகளின் உமிழ்வு அளவுகளைக் கட்டுப்படுத்தவும் பெரியளவில் முயன்றாலே தவிர எந்த மாற்றமும் ஏற்படாது.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *