நடிகர் அஜித்குமார் சினிமாவில் 32 ஆண்டுகளை நிறைவு செய்ததை தொடர்ந்து விடாமுயற்சி படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார் 1990 ஆம் ஆண்டு ’என் வீடு என் கணவர்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
தொடர்ந்து, 1993 ஆம் ஆண்டு தெலுங்கில் பிரேம புஸ்தகம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன்பின், ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன், அவள் வருவாளா என பல காதல் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் வளரும் நட்சத்திரமானார்.

2000-களின் துவக்கத்தில் வாலி, அமர்க்களம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தீனா போன்ற படங்கள் அவருக்கு பெரிய ரசிகர்களைப் பெற்றுத்தந்தது.
காதல் நடிகராக மட்டுமே அறியப்பட்டவர் தீனா, சிட்டிசன், ரெட், வில்லன் படங்களில் தன்னை ஆக்ஷன் நாயகனாகவும் வலுப்படுத்திக்கொண்டார்.

சில தோல்விப்படங்களால் துவண்டு கிடந்தவருக்கு பில்லா திரைப்படம் பெரிய வெற்றியைக் கொடுத்து அவரை மீண்டும் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. தன் 50-வது படமான மங்காத்தா படத்திலும் நெகடிங் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கொண்டாட வைத்தார்.
கடந்த சில ஆண்டுகளாக ஆக்ஷன் மற்றும் குடும்ப பின்னணி கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது, விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்கள் இவர் நடிப்பில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில், நடிகர் அஜித் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி 32 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து விடாமுயற்சி படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதில், “32 ஆண்டுகள் தீரா சாதனைகளும், ஆறாத ரணங்களும் யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி” எனக் குறிப்பிட்டுள்ளனர்.