ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘துரந்தர்’ (Dhurandhar) படத்தில் தான் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்தும், சக நடிகர்களின் வெற்றி தனக்கு பொறாமையை ஏற்படுத்துகிறதா என்பது குறித்தும் நடிகர் அக்ஷய் குமார் பேசியிருக்கிறார்.

டெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா டுடே கான்க்ளேவ் 2026’ நிகழ்வில் (India Today Conclave) இது குறித்து பேசியிருக்கிறார்.
அவர், “‘துரந்தர்’ படத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இது முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படம். படம் முழுவதும் ஆக்ஷன் மற்றும் ரத்தம் தெறிக்கும் சண்டைகள் நிறைந்துள்ளன. மக்கள் அதை ஏற்றுக்கொண்டு ரசிக்கிறார்கள்.
ரன்வீர் சிங் ஒரு ‘ஆங்கிரி யங் மேன்’ பிம்பத்தைச் சரியாக அந்தப் படத்தில் திரைக்குக் கொண்டு வந்திருந்தார்.
இயக்குநர் ஆதித்யா தர் என்னை அப்படத்தின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நினைக்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

பலமுறை நான் ரன்வீரை சந்திக்கும்போது, அவர் என்னிடம் ‘அது எவ்வளவு சிறந்த படம், நான் அதில் நடித்திருக்க வேண்டும்’ என்று என்னிடம் கூறுவார். இது போன்ற விஷயங்கள் நடப்பது இயல்புதான்.
சில படங்கள் அவர் செய்திருக்கலாம் என நினைக்கிறார். சிலவற்றை நான் செய்ய நினைக்கிறேன். நாங்கள் சுமார் 15-20 நடிகர்கள் இருக்கிறோம்.
இந்தியாவில் 180 படங்கள் எடுக்கப்படுகின்றன. அனைவருக்கும் வேலை கிடைக்கிறது. ஒரு சிறந்த படத்தில் நாம் நடித்திருக்கலாமே என்ற வருத்தம் இருக்கலாமே தவிர, மற்றவர்கள் மீது பொறாமை ஏற்படுவதில்லை.” எனத் தெரிவித்திருக்கிறார்.