அமெரிக்காவில் பயணிகள் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் நேருக்குநேர் மோதி புதன்கிழமை இரவு விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆற்றில் விழுந்த பயணிகள் விமானத்தில் 64 பேர் பயணித்ததாக கூறப்படும் நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க : நிஜ்ஜாா் கொலையில் இந்தியாவுக்கு தொடா்பில்லை: கனடா ஆணையம் அறிக்கை
கன்சாஸில் இருந்து புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 64 பயணிகளுடன் வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையத்தை நோக்கி இந்திய நேரப்படி இன்று அதிகாலை வந்துகொண்டிருந்தது. (உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு) ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்க தயாராக போடோமாக் நதியின் மேல் விமானம் பறந்து கொண்டிருந்தபோது 3 அமெரிக்க வீரர்கள் பயண் செய்த ராணுவத்தின் பிளாக்ஹாக் ஹெலிகாப்டர் அந்த வான் பரப்பில் வந்தது. அப்போது திடீரென பயணிகள் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. அவை வெடித்து தீப்பிழம்புடன் போடோமாக் நதியில் விழுந்தது.
தகவல் அறிந்ததும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து நதியில் விழுந்த பயணிகள் மீட்கும் பணி விரைந்து நடைபெற்றது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ரீகன் தேசிய விமான நிலையம் மூடப்பட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.. இதுகுறித்த தகவல்கள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் போடோமாக் நதியில் இருந்து உடைந்த ஹெலிகாப்டர் மற்றும் விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டன. மேலும் இதுவரை 28 உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மற்ற பயணிகள் மற்றும் ராணுவவீரர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைத்து இருக்க வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் ஹலிகாப்டர் மற்றும் விமானத்தில் இருந்த ராணுவவீரர்கள் உள்பட 67 பேரும் இறந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விபத்து நடந்தது இரவுநேரம் என்பதால் உடல்களை தேடுவதில் பாதிப்பு ஏற்பட்டது.
ஐஸ் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் ஜோடி பலி
விபத்தில் சிக்கிய பயணிகள் விமானத்தல் கணவன் மனைவியான முன்னாள் ஐஸ் ஸ்கேட்டிங்க சாம்பியன்களான யெவ்ஜீனியா ஷிஷ்கோவா மற்றும் வாடிம் நௌமோவ் ஆகியோர் பலியான தகவல் வெளியாகி உள்ளது. 1994 ஆம் ஆண்டு இந்த ஜோடி ஸ்கேட்டிங்கில் உலக சாம்பியன்கள் ஆவர். மேலும் அவர்கள் தற்போது இளம் ஸ்கேட்டர்களுக்கு பயிற்சி அளித்து வந்தனர். ரஷ்யாவை சேர்ந்த அவர்கள் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் குடியேறி இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த தம்பதி பயிற்சியாளர்கள் இளம் ஸ்கேட்டர்கள் குழுவுடன் பயணம் செய்தனர். 13 ஸ்கேட்டர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அவர்களை பற்றிய முழுவிபரம் இன்னும் தெரியவில்லை. இதற்கிடையே ரீகன் தேசிய விமான நிலையத்தில் உள்ளுர் நேரப்படி காலை 11 மணிக்கு மேல் விமானங்கள் வழக்கம் போல் இயங்கத்தொடங்கின.