கிராமப்புறங்களில் இருந்து உயர்கல்விக் கனவுடன் சென்னைக் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களுக்குப் பெரும் சவால், தங்குமிடம்தான். பல கல்வி நிறுவனங்களில், கல்விக்கட்டணத்தைவிட விடுதிக்கட்டணத்தை அதிகமாகத் தீட்டிவிடுகிறார்கள். எளிய குடும்பத்துப் பிள்ளைகளுக்கு அதெல்லாம் கட்டுப்படியாகாது. எங்கேனும் ஒண்டிக்கொண்டு படிப்பை முடிக்க நேர்கிறது. அப்படிப்பட்ட பிள்ளைகளுக்குக் கைகொடுப்பதற்காக ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் நிறுவனம், மூன்று வேளை உணவு வசதியோடு சென்னைப் போரூரில் ஒரு கட்டணமில்லா விடுதியைத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டு முதல் இயங்கும் இந்த விடுதியில் 200 மாணவர்கள் வரைக்கும் இடமுண்டு.
ஜி.ஆர்.டி ஜூவல்லரி குழுமம், ‘தங்கமாளிகை மகாலட்சுமி டிரஸ்ட்” என்ற அறக்கட்டளையை நடத்திவருகிறது. ஜி.இராஜேந்திரன், ஜி.ஆர்.அனந்த பத்பநாபன், ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை அறங்காவலர்களாகக் கொண்டு செயல்படும் இந்த அறக்கட்டளை சார்பில் ஒவ்வோராண்டும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 709 பேருக்கு 3.62 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கு உட்பட்டு மாணவர்களின் கல்விக்கட்டணம் உதவித்தொகையாக வழங்கப்படும். தமிழகம் மட்டுமன்றி, பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா என ஜி.ஆர்.டி ஜூவல்லரி நிறுவனம் செயல்படும் எல்லா மாநில மாணவர்களுக்கும் இந்த உதவித்தொகை பல வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை தருவதோடு விட்டுவிடாமல் அவர்கள் படிப்பை முடித்து வேலைக்குச் செல்லும் வரை கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதலும் தரப்படும்.
உதவித்தொகை பெற தேர்வாகும் மாணவர்கள் துறைவாரியாக வாட்ஸப் குழுக்களில் இணைக்கப்படுவார்கள். ஜி.ஆர்.டி நிறுவனம் சென்னையிலும் திருத்தணியிலும் பள்ளி கல்லூரிகளை நடத்தி வருகிறது. அவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களும் அதில் இருப்பார்கள். மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தனித்திறன் சார்ந்த வழிகாட்டுதலோடு தனிப்பட்ட பிரச்னைகளையும் கலந்துரையாடி ஆலோசனை வழங்குவார்கள். இவைதவிர, நிறைய பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளுக்கு உள்கட்டமைப்புகளையும் மேம்படுத்தித் தந்திருக்கிறது ஜி.ஆர்.டி நிறுவனம்.
தற்போது வெளியூரில் இருந்து நகர்ப்புறங்களுக்கு வந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதுபற்றிச் செய்த ஆய்வில், கல்லூரி விடுதிகள் கிடைக்காத மாணவர்களுக்குத் தங்குமிடமும் உணவும் பெரிய பிரச்னையாக இருப்பது தெரிய வந்திருக்கிறது. அந்தப் பிரச்னையைத் தீர்க்கவே இந்த விடுதியை உருவாக்கியிருக்கிறார்கள்.
போரூரில் உள்ள ஜி.ஆர்.டி. மகாலட்சுமி மாணவர் விடுதி அழகிய சூழலில் இருக்கிறது. 33 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையிலும் தாராளமாக 6 பேருக்கு மேல் தங்கலாம். தரைத்தளத்தில் மாணவர்கள் பயன்படுத்துவதற்கான கம்ப்யூட்டர் லேப் உள்ளது. உள்ளே விசாலமான ஹைடெக் சமையலறை மற்றும் டைனிங் ஹால். இங்கே டி.வி-யும் உண்டு. சாப்பிடும்போது மட்டும் மாணவர்கள் டி.வி பார்க்கலாம். மேலே வரிசையாக அறைகள். பெரிய அறையொன்றில் நூலகம் இருக்கிறது. மாணவர்களுக்குத் தேவைப்படும் புத்தங்களின் பட்டியலை அவ்வப்போது பெற்று நூலகத்தை நிரப்புகிறார்கள். அதன் எதிரே உள்விளையாட்டரங்கம். டேபிள் டென்னிஸ், கேரம், செஸ் விளையாடலாம்.
8 மணிக்கு மேல் மாணவர்களை மொபைல் போன் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. வார்டனிடம் தந்துவிடவேண்டும். லேப்டாப்களையும் ஆப் செய்து லாக்கரில் வைத்துவிட வேண்டும். பத்து மணிக்கு மேல் படிக்க விரும்பும் மாணவர்கள் தரைத்தளத்தில் ஏ.சி வசதியோடு இருக்கிற அறையில் வந்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் படிக்கலாம். அதேபோல இந்த அறையில் உள்ள கம்ப்யூட்டர்களை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். விடுமுறை நாள்களில் ஊருக்குச் செல்ல விரும்பும் மாணவர்கள் செல்லலாம்.
காலை 5 மணிக்கு விடுதியில் தேநீர் ரெடியாக இருக்கும். அலாரம் அடித்ததும் மாணவர்கள் குளித்து முடித்து கீழே வந்துவிட வேண்டும். சிறிய பிரார்த்தனை நடக்கும். காலை 6 மணிக்கு டிபன் தயாராகிவிடும். 7 மணிக்கே மதிய உணவும் தயாராகிவிடும். சைவ உணவுதான். ஆனால் தரம். மதிய உணவு பெரும்பாலும் கலவை சாதம், கூட்டு அல்லது பொரியல். காலை டிபனை சாப்பிட்டுவிட்டு மதிய உணவை கேரியரில் கட்டிக்கொண்டு மாணவர்கள் கிளம்பிவிடுகிறார்கள். இரவு டிபன் அல்லது சாம்பார், பொரியலோடு சாப்பாடு இருக்கும்.
எம்.எஸ்ஸி முடித்து பி.எட் படிக்கிற விக்னேஷ், செய்யாறு அருகில் உள்ள சித்தாத்தூரில் இருந்து வந்திருக்கிறார். இஸ்ரோவில் வேலை செய்ய வேண்டும் என்பது அவர் கனவு.
‘‘படிக்கிறபோதே ஊர்ல நிறைய வேலைகள் செய்வேன். கத்தரிக்காய் வியாபாரம் செய்வேன், காட்டுக்குள்ள போய் சீவுமார் வெட்டிட்டு வந்து விப்பேன். ஆடுமாடு மேய்ப்பேன். யு.ஜி முடிக்கிறதே பெரும்பாடா இருந்துச்சு. போராடி பி.ஜியும் முடிச்சுட்டேன். எனக்கு பிசிக்ஸ் ரொம்பப் பிடிக்கும் நிறைய படிக்கணும், படிச்சதை மத்தவங்ககிட்ட பகிர்ந்துக்கணும்னு நினைப்பேன். அதனாலதான் பி.எட் போட்டேன். சென்னையில சாதாரணமா மூணு வேளை சாப்பிட்டு, தங்கணும்னா ஒரு நாளைக்கு 500 ரூபாய்க்கு மேல வேணும். என்னை மாதிரி பசங்களுக்கு இந்த ஹாஸ்டல் பெரிய விஷயம். பஸ் சார்ஜ் தவிர்த்து ஒரு ரூபாய்கூட எனக்குச் செலவு இல்லை. கம்ப்யூட்டர், வைஃபை வசதியோட கட்டணமே இல்லாம இப்படியொரு விடுதி கிடைக்கிறது பெரிய விஷயம்’’ என்கிறார் விக்னேஷ்.
ஜி.ஆர்.டி குழுமத்தின் சேர்மன் ஜி.இராஜேந்திரனிடம் இதுகுறித்துப் பேசினோம்.
‘‘கடந்த ஆண்டு இந்த விடுதியைத் தொடங்கினோம். இந்த ஆண்டு முதல் தங்குமிடம், உணவு மட்டுமன்றி கல்வி உதவித்தொகையும் சேர்த்து வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம். பத்தாம் வகுப்பு, பிளஸ் ஒன் மதிப்பெண்களை வைத்து பிப்ரவரி இறுதி வரைக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு 100 பேரைத் தேர்வு செய்யத் திட்டம். நாங்கள் எதிர்பார்க்கும் முக்கியத் தகுதி, படிப்பில் ஆர்வம் இருக்கவேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், பெற்றோரில் ஒருவரை இழந்த பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்குவோம்.
நானே அந்தக் காலத்தில் ஸ்காலர்ஷிப் வாங்கி இலவச விடுதியில் தங்கிப் படித்தவன். இதன் தேவையும் அவசியமும் முழுமையாக எனக்குத் தெரியும். இளம் வயதில் என்னைப் போல பொருளாதாரத்தில் பின்தங்கிச் சிரமப்படும் மாணவர்களுக்குக் கைகொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதைத் தொடங்கியிருக்கிறோம். எங்களிடம் வந்துவிட்டால் படிப்பைப் பற்றி மட்டும் அவர்கள் கவலைப்பட்டால் போதும். மற்றவற்றை நாங்கள் பார்த்துக்கொள்வோம்.
சென்னைக்கு வெளியே இருப்பவர்களுக்கு மட்டுமே விடுதி வழங்கப்படும். எந்தக் கல்லூரியில் படித்தாலும் பிரச்னையில்லை. ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், இன்ஜினீயரிங், பாலிடெக்னிக், மெடிக்கல் படிப்பவர்களுக்கு முன்னுரிமை. மூன்று அல்லது நான்காண்டுகள் முடித்து வெளியே போகும்போது அவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றம் வரவேண்டும் என்று விரும்புகிறோம்.
உடல், மன ஆரோக்கியம் மாணவர்களுக்கு ரொம்பவே முக்கியம். அதை பள்ளிக்காலத்தில் இருந்தே அனுபவபூர்வமாக உணர்ந்தவன் நான். அதனால் விடுதியில் யோகாவுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம். யோகாவும் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பும் கட்டாயம் மாணவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். வரும் கல்வியாண்டில் இருந்து நேர்காணல்களை எதிர்கொள்ளும் முறை, வேலைவாய்ப்புத் திறன்கள் குறித்த பயிற்சிகளையும் வழங்கத் திட்டமிட்டுள்ளோம். எங்கள் விடுதியில் தங்கிப் படித்து நல்ல நிலைக்கு வந்தவர்கள், அதன்பின் கல்விக்காகச் சிரமப்படும் ஒரு பிள்ளைக்கு உதவி செய்தால் எங்கள் பணி முழுமை அடைந்ததாகக் கருதுவோம்…’’ என்கிறார் அவர்.
கல்வி, ஒரு தனி நபரின் வாழ்க்கையை மட்டுமல்ல, ஒரு தலைமுறையின் முகத்தையே மாற்றும். எளிய குடும்பத்துப் பிள்ளைகளின் கல்விக்காகச் செய்யும் உதவி எல்லாவற்றையும்விட மேலானது. விரிவடையட்டும் ஜி.ஆர்.டி குழுமத்தின் இந்த நற்பணி!
விடுதிக்கான விண்ணப்பம் மற்றும் பிற விவரங்களை அறிய:
தொடர்பு எண் – 7305953749
Mail ID – grthostelporur@gmail.com