Ananda Vikatan – 31 December 2025 – பெருந்தமிழர் விருது – எஸ்.வி.ராஜதுரை | perunthamizhar-award-s v rajadurai

Spread the love

எஸ்.வி.ஆர் என தோழர்களால் அன்புகூடி அழைக்கப்படும் எஸ்.வி.ராஜதுரை, தமிழ்ச் சமூகத்தின் அறிவுத் தேடலுக்குத் திசை காட்டும் வழிகாட்டி. கடந்த 65 ஆண்டுகளாக தமிழ்ச் சமூக வரலாற்றில் மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகியவற்றை இணைத்து அறிவுப் புரட்சியை ஏற்படுத்திவரும் ராஜதுரை, கலை, இலக்கியம், சமூகம், பொருளாதாரம், அரசியல், மனித உரிமை எனப் பரந்த களங்களில் அழுந்தத் தடம் பதித்த மூத்த அறிவாளுமை. தமிழகத்தில் சிவில் உரிமைகளுக்கான அடித்தளத்தை அமைத்த முன்னோடி.

எஸ்.வி.ராஜதுரை

எஸ்.வி.ராஜதுரை

கால் நூற்றாண்டுகளுக்கும் மேல் போராடிவரும் மனித உரிமைப் போராளி. தீட்டிய ஈட்டியாக தன் எழுத்துகளை விமர்சனங்களாக முன்வைக்கும் இவர், 60-க்கும் மேற்பட்ட நூல்கள், 300-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எனத் தமிழ்ச் சமூகத்தின் அறிவு மரபை வளர்த்துவரும் நடமாடும் நூலகம். வரலாறு மற்றும் தத்துவரீதியாக ஆய்வறிஞர் வ.கீதாவுடன் இவர் இணைந்து எழுதிய நூல்கள், நாம் என்றென்றும் கையிலேந்த வேண்டிய அறிவாயுதங்கள். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர், பி.யூ.சி.எல். அமைப்பின் முன்னாள் துணைத் தலைவர், எழுத்தாளர், ஆய்வாளர், பதிப்பாசிரியர் எனப் பன்முகம் கொண்ட எஸ்.வி.ஆரை, தென்னாசியாவின் மாபெரும் மார்க்சிய ஆய்வறிஞராக உலகம் முழுவதிலும் உள்ள இடதுசாரிகள் கொண்டாடுகிறார்கள். உலகின் ஆகச்சிறந்த கலை இலக்கியப் படைப்புகளைத் தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர்களில் முக்கியமானவர். இதேபோல ஆங்கில அறிவுலகிற்குப் பெரியாரைக் கொண்டு சேர்த்ததிலும் எஸ்.வி.ஆரின் பங்களிப்பு அளப்பறியது. கிராம்ஷி, ழான் பால் சார்த்தர் போன்றோரின் கோட்பாடுகளையும் தமிழ் உலகிற்குத் தீர்க்கமாக இவரே கொண்டு வந்து சேர்த்தார். இந்த 85 வயதிலும் பூதக்கண்ணாடியை வைத்துக்கொண்டு தினமும் 12 மணி நேரம் வாசிப்பு, எழுத்து என இயங்கிவரும் இந்தப் பெருமைமிகு பேரறிஞருக்கு ‘பெருந்தமிழர் விருது’ வழங்கி மரியாதை செய்கிறது ஆனந்த விகடன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *