Ananda Vikatan – 31 December 2025 – 2025 – டாப் 10 இளைஞர்கள்..! | top-ten-youngsters-of-2025

Spread the love

துருவ் விக்ரம் – ஒளிரும் நாயகன்

துருவ் விக்ரம்

துருவ் விக்ரம்

தமிழ் சினிமா முகம் மாறியிருக்கிறது. வித்தியாசக் கதைக்களங்கள், அபூர்வ கதாபாத்திரங்களைத் தேடத் தொடங்கிவிட்டார்கள் ரசிகர்கள். அப்படிப்பட்டவர்கள் விரும்பும் இளைஞனாகக் கிடைத்திருக்கிறார் துருவ் விக்ரம். வில்லேஜ் சப்ஜெக்ட்டில் உழைத்து, ஆற்றாமை, கோபம், வெறித்தனம் என உணர்வுகளைக் கலந்து கட்டி ஆடும் துருவ், ‘பைசன் காளமாடனி”ல் எடுத்தது பெரும் பாய்ச்சல். திரையுலகில் தொடக்கத் தடுமாற்றங்களைக் கடந்து அவர் காட்டிய நிதானத்தின் வெளிப்பாடே, இன்று நம்பிக்கை நட்சத்திரமாக ரசிகர்களின் இதயத்தில் அவரை அமர்த்தியிருக்கிறது. உடலைக் குறைத்து, உருமாற்றி, உழைப்பைக் கொட்டி, கோபத்தையும் ஆற்றாமையையும் முகத்தில் இருத்திப் படத்தில் அவர் வாழ்ந்ததெல்லாம் பேரழகு. அப்பாவின் அணைப்பை விட்டு தன்னந்தனியாக வேட்டையாடப் புறப்பட்டதே அடுத்தகட்டத்தின் அறிகுறிதான். ‘பைசனி’ல் அப்பாமீதான மரியாதை, அக்கா மீதான பேரன்பு என அவர் வெளிப்படுத்தியதெல்லாம் உணர்வுகளின் வானவில். தணியாத தாகம், குறையாத வேகம் எனத் தனக்கான சினிமாவைத் தேடிப் புறப்பட்டுவிட்டது இந்தப் பறவை. அடுத்தடுத்த களங்களில் சாதிக்க அவருக்கு பெரும் சவாலும் அதனால் நமக்கு நல்ல படைப்புகளும் காத்திருக்கின்றன.

வீ.ப.ஜெயசீலன் ஐ.ஏ.எஸ் – அன்பின் அதிகாரி

வீ.ப.ஜெயசீலன் ஐ.ஏ.எஸ்

வீ.ப.ஜெயசீலன் ஐ.ஏ.எஸ்

ஓர் அரசு அதிகாரி மனம் வைத்தால் மக்களின் வாழ்க்கையே மாறும் என்பதற்கு நல்லுதாரணம் இவர். விருதுநகரில் ஆட்சியராக இருந்த காலத்தில், மாற்றத்தை முன்வைத்து அவர் உருவாக்கிய திட்டங்கள் நாட்டுக்கே முன்மாதிரி. சட்டம் – ஒழுங்கைக் கண்காணிப்பதும் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் மட்டுமல்ல ஆட்சியரின் பணி. அதற்கும் மேலாக அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தையும் வார்த்தெடுப்பதுதான் என்றுணர்த்திய வகையிலும் ஜெயசீலன் தனித்துவமானவர், தினமும் ஒரு மணி நேரம் மாணவர்களுக்காக ஒதுக்கி அவர் நடத்திய ‘காபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சி மாணவர்களின் கனவுகளுக்குப் பெருவெளிச்சம் பாய்ச்சியது. இந்தத் தொடர் உரையாடல் பள்ளிக்கல்வி முடிக்கும் 95% மாணவர்கள் கல்லூரிக்குச் செல்வதை சாத்தியமாக்கியதோடு, பட்டாசுத் தொழிலாளியின் குழந்தை ஐ.ஐ.டி-க்குள் நுழையவும், லாரி ஓட்டுநரின் பிள்ளைகள் என்.ஐ.டி-க்குப் போகவும் வழிகாட்டியது. எத்துப்பல்லால் உளவியல் தாக்கத்துக்குள்ளாகும் பிள்ளைகளுக்கு சிகிச்சை அளிக்க, தனியார் நிறுவனங்களை இணைத்து இவர் உருவாக்கிய ‘மலரும் புன்னகை’ திட்டம் தேசமெங்கும் பாராட்டப்பட்டது. திருநங்கைகள் தங்கள் குடியிருப்புக்கு ‘அன்பு ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் நகர்’ என்று பெயர் சூட்டி அழகு பார்த்தது, Aspirational District என்று மத்திய அரசிடம் 3 கோடி ரூபாய் பரிசு வாங்கியதெல்லாம் இவரின் நல்லாளுமைக்குச் சான்று. அதிகாரத்தையே அன்பின் அடையாளமாக மாற்றிய இந்த இளம் ஆட்சிப்பணி அதிகாரியை 2025-ம் ஆண்டின் நம்பிக்கை இளைஞராகத் தேர்வு செய்வதில் பேருவகை கொள்கிறது ஆனந்த விகடன்.

ராஜேஸ்வரி – தடையுடைத்த தங்கை

ராஜேஸ்வரி

ராஜேஸ்வரி

கல்வராயன் மலையில் ஒரு குக்கிராமத்திலிருந்து வந்து ஐ.ஐ.டி மெட்ராஸ் என்ற பெரும் கதவைத் திறந்து உள்ளே நுழைந்திருக்கிறார் இந்த ஆதி நிலப் பெண். இருப்பே கேள்விக்கு உள்ளாகியிருக்கும் பழங்குடிகளுக்கு அன்றாட வாழ்க்கையே சிரமமான நிலையில், விடாப்பிடியாகக் கல்வியைப் பற்றிக்கொண்டு படர்ந்திருக்கும் ராஜேஸ்வரிக்கு எளிதாக வாய்த்துவிடவில்லை எதுவும். புற்றுநோய்க்கு பலியான அப்பா, தனித்து நின்று நான்கு பிள்ளைகளின் பசியாற்றப் போராடிய அம்மா என அத்தனை இடர்களிலும் நம்பிக்கையை மட்டும் விடவேயில்லை ராஜேஸ்வரி. கருமந்துறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் படித்தவரிடம் ஐ.ஐ.டி தேர்வு பற்றி ஆசிரியர்கள் சொல்ல, அதை அப்படியே மனதில் நிறுத்தி அயராமல் தயாரானார். தமிழக அரசு ஆன்லைன் வழியே நடத்திய ஜே.இ.இ பயிற்சியில் பங்கேற்றவருக்கு, பழங்குடியினர் பிரிவில் இந்தியாவிலேயே 417-வது இடம் கிடைத்தது ஒன்றும் சாதாரண விஷயமில்லை. அவர் போட்ட உழைப்பும் தொலைத்த உறக்கமும் கொஞ்ச நஞ்சமல்ல. அதற்கான பரிசு ஐ.ஐ.டி மெட்ராஸில் ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் படிப்பு. கூடவே, தமிழ்நாடு அரசு பழங்குடியினர் பள்ளியிலிருந்து ஐ.ஐ.டி-க்குள் நுழைந்திருக்கும் முதல் பெண் என்ற பெருமையும் கிரீடமாகிறது. இறுக்கமான பண்பாட்டுப் படிநிலைகளைக் கொண்ட ஒரு பழங்குடி சமூகத்திலிருந்து இந்த உயரத்தை எட்டிப் பிடித்ததற்காகவே இவருக்குத் தரலாம் நூற்றுக்கு நூறு. மனது வைத்தால் ஏழ்மையோ சூழலோ எதுவும் தடையில்லை என்று நிரூபித்து கல்வியை ஏணியாக்கி விண்ணை ஆளப்போகும் அன்புத் தங்கைக்கு நம்பிக்கை விருதளித்துப் பெருமிதப்படுகிறது ஆனந்த விகடன்.

சாண்டி – ட்ரெண்டிங் மாஸ்டர்

சாண்டி

சாண்டி

நடனத்திற்கென அறியப்பட்ட சாண்டி, நடிப்பிலும் அடைந்திருப்பது எல்லோரும் கவனிக்கத்தக்க உயரம். வடசென்னைத் தெருக்களில் நடமாடித் திரிந்த கால்கள், இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரையும் ஆடவைக்கும் இடம் தொட்டது, தீராத தேடலுக்கும் அசராத உழைப்புக்கும் கிடைத்த அசலான வெற்றி. ரியாலிட்டி ஷோக்களில் தன் மின்னல் வேக நடனத்தால் தனிக்கவனம் பெற்ற சாண்டியின் பயணம், சினிமாவில் கால் வைத்ததும் டாப் கியரில் எகிறியது. நடன மொழியில் இவர் காட்டிய வித்தியாசம், இயக்குநர்களின் பார்வையை இவர் பக்கம் திருப்பியது. ‘லியோ’ படத்தில், ஈவிரக்கமற்ற கொடூர வில்லனாக சாண்டியைக் கண்டபோது ‘அடடே’ என்று ஆச்சர்யப்பட்டார்கள் ரசிகர்கள். அடுத்தகட்ட அசாத்திய எபிசோடாக அமைந்தது ‘லோகா சாப்டர் ஒன்’. ‘லஞ்ச போலீஸ் நாச்சியப்ப’னாக இவர் கண்களை உருட்டி மிரட்டியது, மொழிகள் கடந்தும் ரசிக்க வைத்தது. சற்றே பெண்மை கலந்த குரல், அதற்கான முற்றிலும் புதிய உடல்மொழி எனத் தெலுங்கு ‘கிஷ்கிந்தாபுரி’யில் மாற்றுத்திறனாளியாக இவர் எடுத்த அவதாரம், அதற்கடுத்த ஆச்சர்யம். அடுத்தடுத்து அவரது கலை எல்லைகள் விரிந்துகொண்டே போவது கண்கூடு. கன்னட சினிமாவையும் விட்டுவைக்கவில்லை இந்த `பேன் இந்தியா’ அசுரன். தடை பல தாண்டி, இன்று இந்திய சினிமாவில் கவனிக்கத்தக்க நம்பிக்கையாக மிளிர்கிற இந்த வடசென்னை நண்பன், திறமையும் தேடலும் கொண்ட நவீன இளைஞர்களுக்கு ரோல்மாடல்.

மாயா – பறக்க வைக்கும் ராஜாளி

மாயா

மாயா

மாறாத் தழும்புகளைத் தந்து வாழ்க்கையை முடக்கிப்போட்ட விபத்திலிருந்து மீண்டெழுந்த பீனிக்ஸ் பறவை மாயா. ஆறு வயதில் பட்டாசு கொளுத்தும்போது பட்ட தீ, இரக்கமே இல்லாமல் உடலைச் சிதைக்க, தடுமாறிப்போனது மாயாவின் வாழ்க்கை. மற்றவர் பார்வைக்கு பயந்து முழுக்கைச் சட்டைக்குள் தன்னை முடக்கிக்கொண்ட மாயா, ஒரு கட்டத்தில் அதுவே தன் அடையாளம் என வீறு கொண்டு எழுந்தது அழகான திருப்பம். விளையாட்டாக அப்பாவின் கியர் பைக்கை ஓட்டிப் பழகியவர், இன்று எல்லாப் பெண்களையும் பைக்கில் பறக்க வைக்கிறார். கல்லூரி மாணவிகள் தொடங்கி இல்லத்தரசிகள் வரை இவரது ‘நோமேட் பைக்கர்ஸ் கிளப்’பில் பைக் பழகி சாலையை விருப்பமான ராஜபாட்டையாக்கியிருக்கிறார்கள். தமிழகம் தாண்டியும் கேரளா, மகாராஷ்டிரா, கோவா என 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் இவரது பயிற்சிக்கான களம் விரிகிறது. பைக் மெக்கானிக்ஸ் கேம்ப், குரூப் ரைடிங் என பெண்கள் பைக் பழகுவதை ஒரு கொண்டாட்ட அனுபவமாக மாற்றுவதிலும் மாயா தனித்து நிற்கிறார். அன்றைக்கு உடல் காயம் கண்டு அஞ்சி நடுங்கிய பெண், இன்று ஆயிரக்கணக்கான பெண்களுக்குச் சிறகுபூட்டிப் பறக்க வைக்கிறார். உழைப்புக்கும் போராட்ட குணத்துக்கும் மாயா அப்பழுக்கற்ற உதாரணம். விபத்து, இழப்பு, தடை என வாழ்க்கை இடறினாலும் விடாது எழுந்து நிற்கிற இந்த ராஜாளிப் பறவையை நம்பிக்கை இளைஞராகத் தேர்வு செய்து கனிவுடன் கரம் பற்றுகிறது ஆனந்த விகடன்.

இசக்கிமுத்து – வியக்க வைக்கும் வேகப்பந்தாளன்

இசக்கிமுத்து

இசக்கிமுத்து

தமிழக கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கை முகம். விளிம்பு நிலை இளைஞர்கள் பலருக்கும் கிரிக்கெட் என்பது இன்றும் அரிதான பெருங்கனவுதான். புதிது புதிதாக வரும் லீக்குகள், திரண்டு வரும் திறமையாளர்கள் என களம் களைகட்டியிருக்கும் இந்த நேரத்தில், கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் இசக்கிமுத்து நிகழ்த்துவது சரித்திர சன்னதம். திருநெல்வேலி மாவட்டம் களக்குடியில் பிறந்த இந்த 23 வயது இளைஞன் விதைத்திருப்பது பல தலைமுறைகளுக்குமான நம்பிக்கை. ஆரம்பத்தில் ரப்பர் பந்து, டென்னிஸ் பந்துகளில் தொடங்கிய இவரின் கிரிக்கெட் பயணம், தொடர் பயிற்சிகளால் பக்குவப்பட்டு இன்று தமிழக அணி வரைக்கும் அதிவேகத்தில் வந்து சேர்ந்திருக்கிறது. தமிழ்நாடு ப்ரீமியர் லீகில் திருப்பூர் அணிக்காக 8 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியபோது ‘யார் இந்தத் தம்பி’ என எல்லோர் பார்வையும் இவரின் பக்கம் திரும்பியது. அடுத்தடுத்து அவர் நிகழ்த்திய சாதனைகள், சையத் முஷ்தாக் அலி டிராபியில் தமிழ்நாடு அணியில் அவருக்கான இடத்தை உறுதிசெய்தன. சௌராஷ்டிரா அணிக்கு எதிராக வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டைச் சாய்த்து அரங்கத்தை அதிர வைத்து ஆச்சர்யப்படுத்தினார். படுதுல்லியமான இலக்கு, நிதான வேகம் எனப் பந்துவீச்சில் இவர் வெளிக்காட்டும் தனித்துவம், சீக்கிரமே இந்திய அணிக்கான கதவுகளைத் திறக்கவைக்கும். முன்னணி வீரர்களையும் தன் பௌலிங் வித்தைகளால் விழியுயர்த்த வைத்திருக்கும் இந்தப் புத்திளைஞனை ‘சென்று வென்று வா’ என ஆரத்தழுவி வாழ்த்துகிறது ஆனந்த விகடன்.

அருண் ராஜீவ் சங்கரன் – சாதனைத் தொழில்நுட்பன்

அருண் ராஜீவ் சங்கரன்

அருண் ராஜீவ் சங்கரன்

சாப்ட்வேர் நிறுவனம் தொடங்க, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற பெருநகரங்கள்தான் பொருத்தமென நினைப்பவர்களுக்கு அருண் சொல்லும் செய்தி முக்கியமானது. திட்டமும் தேடலும் சரியாக இருந்தால் எங்கிருந்தும் நீங்கள் சாதிக்கலாம். இடமல்ல, எண்ணமே முக்கியம். சொந்த ஊரான நாகர்கோவிலில் ஏழாண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் அருண் தொடங்கிய ஃபினோஸ் (FinOS) டெக்னாலஜி நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 100 கோடி ரூபாய் என்பது ஆச்சர்யம். வங்கிக் கணக்குகளை டிஜிட்டலாகப் பராமரிக்கும் இவர்களின் சாப்ட்வேர் நிறுவனம் ஜப்பான், நெதர்லாந்து, கென்யா தொடங்கி 15 நாடுகளில் 75-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சேவை செய்கிறது. சென்னை, துபாய், அமெரிக்காவின் டெலாவர் ஆகிய இடங்களில் விற்பனை அலுவலகங்களையும் உருவாக்கியிருக்கிறார் இந்த 37 வயது இளைஞர். பல ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டு இன்று வளர்ச்சியின் பாதையில் பயணிக்கிற அருண், தன் நிறுவனத்தில் 50 பேருக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கியிருக்கிறார். ஒரு சிறு நகரத்தில் அமர்ந்துகொண்டு உலகெங்கும் கிளை விரித்து நிற்கும் ஃபினோஸ் நிறுவனத்தின் பிசினஸ் ஆண்டுக்காண்டு இரண்டு மடங்காக அதிகரிப்பது, பெரு வளர்ச்சிக்கான அறிகுறி. பில்லியன் டாலர் கம்பெனி கனவோடு வெற்றி நடைபோடும் இந்தத் தொழில்நுட்பனுக்கு 2025-ம் ஆண்டுக்கான நம்பிக்கை இளைஞர் விருதளித்துக் கரம் குலுக்குகிறது ஆனந்த விகடன்.

அபினேஷ் மோகன்தாஸ் – தமிழகத்தின் பெருமிதம்

அபினேஷ் மோகன்தாஸ்

அபினேஷ் மோகன்தாஸ்

வியர்வையையே விதையாக்கி, டெல்டா மண்ணிலிருந்து முட்டி மோதி முளைத்து வந்திருக்கிறார் இந்த இளம் ‘பைசன்.’ திருவாரூர் மாவட்டம், வடுவூரைச் சேர்ந்த இந்த எளிய வீட்டுப் பிள்ளைக்கு இயல்பிலேயே கபடிமீது பெருங்காதல். அதுவும் இந்தியாவுக்காகக் கபடிக் களத்தில் இறங்க வேண்டுமென்பது பெருங்கனவு. அப்பா மறைந்தபோதும் பிள்ளைக்கு எல்லாமுமாக இருந்து அந்தக் கனவுக்கு உயிர் கொடுத்தார் அம்மா தனலட்சுமி. கபடியாடும் கால்களைப் பற்றியிழுத்த வறுமை, அன்றாட வாழ்க்கையைக்கூடப் போராட்டமாக்கியது. ஆனாலும் இந்த நெஞ்சுரம் நிறைந்த இளைஞன் கபடி ஆடுவதிலிருந்து மட்டும் விலகவேயில்லை. புழுதி பறக்கும் களங்களைத் தந்திரமான தற்காப்பு ஆட்டங்களால் தன்வசமாக்கினார். தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அபினேஷின் திறன் கண்டு அரவணைத்து உலக அரங்குகளுக்கு வழிகாட்டியது. உள்ளூரில் பல களங்களில் அனல் மூட்டியவர், பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை வீரர்களில் ஒருவரானார். அவர் மேல் அத்தனை பேரும் வைத்த அந்த நம்பிக்கை, இந்தியா தங்கப்பதக்கத்தைத் தட்டிவரக் காரணமாக இருந்தது. தமிழகத்தின் பெருமிதமாக வந்திறங்கிய இந்த ‘தங்க மகன்’ இனி படைக்கப் போவதெல்லாம் சாதனைகளும் சரித்திரங்களுமே. ஒரு குக்கிராமத்தின் சின்னஞ்சிறு வீட்டுக்குள்ளிருந்து உதித்த கனவு, இன்று உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. கபடிமீது கவனம் குவியத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கும் அன்புத்தம்பிக்கு நம்பிக்கை இளைஞர் விருதளித்துப் பாராட்டுவதில் பேரானந்தம் கொள்கிறது ஆனந்த விகடன்.

அலமேலு மங்கையற்கரசி – மானுட நேசகி

அலமேலு மங்கையற்கரசி

அலமேலு மங்கையற்கரசி

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் அலமேலு, குடியரசுத் தலைவரிடம் ‘ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்’ விருது பெற்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு நமக்குக் கிடைத்த கௌரவம் இது. வாழ்வாதாரமாக இருந்த நிலத்தையும் விற்று நர்ஸிங் படித்தவர், 2008-ல், திருவண்ணாமலை மாவட்டத்தில் செவிலியராக அரசுப் பணியில் நுழைந்தார். மக்களுக்கு நெருக்கமாகி, அவர்களின் அச்சம் போக்கி, வீடுகளிலேயே நடந்த பிரசவங்களை மருத்துவமனைக்கு மாற்றியதில் இவர் உழைப்பு கணிசமானது. மரபு நம்பிக்கைகளில் திளைத்து, நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பந்தலூர் பழங்குடிகளோடு தங்கி, கருத்தடை விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் அவர் செய்தது அரும்பணி. வில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சமூகப் பங்களிப்போடு பிரசவ அறைகளை மேம்படுத்தியது, தேசிய சுகாதார இயக்கத்தின் ‘லக்சயா’ அங்கீகாரம் பெற்றது, மத்திய அரசின் காயகல்ப விருதை வென்றது என எல்லா முன்னேற்றங்களிலும் அலமேலுவின் பங்கு அதிகம். ஒரு செவிலியராகத் தன் பணிவரம்பையும் தாண்டி, மக்கள் நலம் சார்ந்து தொடர்ந்து களத்தில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் பெரும் கவனம் ஈர்க்கிறார் இந்த மானுட நேசகி. எளிய மக்களின் நலனுக்குத் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட இந்தத் தமிழகத்து ‘கைவிளக்கு ஏந்திய காரிகை’யை 2025-ம் ஆண்டின் நம்பிக்கை மனிதர்களில் ஒருவராக அங்கீகரிக்கிறது ஆனந்த விகடன்.

`Bro’ Volunteers குழு – பொதுநலப் போராளிகள்

`Bro’ Volunteers குழு

`Bro’ Volunteers குழு

சுற்றுச்சூழல் சீரழிவா, ஸ்மார்ட் சிட்டி முறைகேடா, நீர்நிலை ஆக்கிரமிப்பா… அத்தனை அநியாயங்களுக்கு எதிராகவும் சட்டப்போராட்டம் நடத்துகிற இந்த வழக்கறிஞர் குழு, கடந்த 7 ஆண்டுகளில் உருவாக்கிய மாற்றங்கள் ஏராளம். மணிபாரதி, வைகை ரத்னா, சகா, பேராசிரியர் புஷ்பவனம், முனீஸ்வரி, அப்துல் ரஹ்மான் ஜலால், சக்கரை முகமது, கதிர் ஆகிய மனமிணைந்த நண்பர்கள் எட்டுப்பேரும் இன்டர்ன்ஷிப் காலத்தில் சேர்ந்தவர்கள். மதுரையை உள்ளடக்கி, ‘நீதிபதி கள ஆய்வு’, ‘அதிகாரிகள் ஆஜர்’, ‘அவமதிப்பு வழக்கு’ என்ற செய்திகளுக்குப் பின்னால் இருப்பவை இவர்கள் தொடுத்த பொதுநல வழக்குகள். எந்த இடத்திலும் தங்களை வெளிப்படுத்தி வெளிச்சம் தேடாத இந்த இளைஞர்கள், நூற்றுக்கும் மேலான பொதுநல வழக்குகளால் அதிகாரத்தை உலுக்கியிருக்கிறார்கள். பொதுப் பிரச்னைகளில் ஆதங்கப்பட்டு அங்கலாய்க்காமல், அதிகாரத்தைக் கூண்டிலேற்றி நீதி கேட்பதில் இருக்கிறது இவர்களின் மனோதிடம். பாதிக்கப்பட்ட எளிய மக்களிடம் கட்டணம் பெறாமல் வழக்காடி நியாயம் பெற்றுத் தருவதும் இவர்களின் மற்றுமொரு தனித்தன்மை. இவர்களால் பல நீர்நிலைகள் மறுவாழ்வு பெற்றன. பொதுவிட ஆக்கிரமிப்புகள் உடைத்தெறியப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் கிடைத்தன. சிறைவாசிகளுக்கு டிஜிட்டல் நூலகம், மாற்றுத்திறனாளிகளுக்கென தனிச்சிறப்பு நீதிமன்றங்கள், மன்னார் வளைகுடாவில் கடற்பசு சரணாலயம் என இவர்கள் சாதித்தவை நிறைய. அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள், பேரங்களுக்குப் பணியாமல் அறத்தின் அருகில் நின்று தொடர்ந்து இயங்கும் இந்த கருப்பு அங்கிக்காரர்களுக்கு நம்பிக்கை விருதளித்து அங்கீகரிக்கிறது ஆனந்த விகடன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *