ஆனந்தம் யூத் பவுண்டேஷன் – வழி காட்டும் ஒளி
காவிரிப் படுகையில் இருந்து புறப்பட்டு வந்து தொழில் முனைவோரான ஐந்து முதல் தலைமுறைப் பட்டதாரிகளால் உருவானது இந்த இயக்கம். கடந்த 14 ஆண்டுகளில், பல நல்மனக்காரர்களின் பங்களிப்போடு 1,159 மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்து ஒளி தந்திருக்கிறது. நல்ல மதிப்பெண் எடுத்தும் கல்லூரிக்குள் கால்வைக்க முடியாமல் தவிக்கும் ஏழை, எளிய குடும்பத்துப் பிள்ளைகளைக் கரம் பற்றி அழைத்து வந்து, விரும்பியதைப் படிக்க வைத்து வேலை பெற்றுத்தரும் வரைக்கும் உற்ற உறவாக இருந்து வழிநடத்துகிறது. இந்தத் தன்னலமில்லாத பொறுப்புணர்வுக்காகவே இந்த அன்பு நண்பர்களுக்கு அள்ளிக் கொடுக்கலாம் ஆயிரம் பூங்கொத்துகள்! 47 மருத்துவர்கள், 444 பொறியாளர்கள், 511 கலை அறிவியல் பட்டதாரிகள், 16 அரசு ஊழியர்கள் என ‘ஆனந்தம்’ தந்த வெளிச்சத்தில் அடுத்தடுத்த தலைமுறைகள் ஒளிர்கின்றன. கல்வியோடு சேர்த்து, தொழில்சார் பயிற்சிகள், முன்மாதிரி மனிதர்களுடனான அனுபவப் பகிர்வுகள், தனித்திறனை ஊக்குவிக்கும் பட்டறைகளென பார்த்துப் பார்த்துப் பட்டை தீட்டி ஜொலிக்க வைக்கிறார்கள் இந்த ‘ஆனந்தம்’ இளைஞர்கள். தஞ்சை கூலித்தொழிலாளியின் மகள் சுமித்ராவும் அரியலூரின் எளிய குடும்பத்துப் பிள்ளை ராதேஷும் ஆண்டுச் சம்பளமாக ரூ. 50 லட்சத்தை எட்டிப் பிடித்த அதிசயமும் நடந்திருக்கிறது. சிறியதொரு விதையில் உயிர்த்த இந்த நற்பணி, பெருமரமாகி பல நூறு பேருக்கு நிழல் விரிக்கிறது. படித்து நல்வாழ்வு பெற்ற அடுத்த தலைமுறை இன்று இந்த இயக்கத்தை முன்னின்று வழிநடத்தும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. தனக்குக் கிடைத்ததைப் பிறருக்கும் தரவேண்டுமென்கிற நல்லெண்ணத்தில் உதித்த இந்த இயக்கம், சத்தமில்லாமல் நிகழ்த்தியிருப்பது மகத்தான மாற்றம். அதற்காகவே இந்த அக்கறை இளைஞர்களை நம்பிக்கை மனிதர்களாகத் தேர்வு செய்து கொண்டாடுகிறது ஆனந்த விகடன்.
டாக்டர் முரளி – மனிதநேய மருத்துவர்
நோய்க்கு மருந்து ஒரு பாதி என்றால், மருத்துவரின் வார்த்தைகள் மறு பாதி. மருத்துவருக்கும் நோயுற்றவருக்கும் உரையாடலே அற்றுப்போன இந்த எந்திரமயக் காலத்தில் அன்பும் கனிவும் படர வரவேற்று அமர வைத்துப் பேசுவதற்காகவே டாக்டர் முரளியை நாம் கொண்டாடலாம். தஞ்சாவூரைச் சேர்ந்த முரளி, குடல் நோய் சிகிச்சை நிபுணர். மருத்துவத்தை விற்பனைப் பொருள் ஆக்காமல் அறத்தோடு இயங்கும் மகத்துவர். எளிய மக்களிடம் சிகிச்சைக்கு இவர் எந்தக் கட்டணமும் வாங்குவதில்லை. வரவேற்பறையில் இருக்கும் உண்டியலில் விரும்பிய தொகையைப் போட்டுச் செல்லலாம். இல்லாதவர்கள் போடாமலும் செல்லலாம். எண்டோஸ்கோபி உட்பட எல்லா சோதனைகளுக்கும் குறைவான கட்டணம்தான். அதுவும் இயலாதோருக்கு விலக்கு உண்டு. ஒவ்வொரு நோயாளருக்கும் தகுந்த நேரம் தந்து நிதானமாகப் பேசி நம்பிக்கையளிப்பதால் மக்கள் இவரைக் கடவுளின் மறு உருவாகவே காண்கிறார்கள். இவர் மீட்ட குடிநோயாளிகளின் எண்ணிக்கை ஏராளம் ஏராளம். மருத்துவத்தை சேவையென்றே கொள்கை வகுத்து இயங்கும் இவர், ‘அர்ப்பணம்” என்ற அறக்கட்டளையையும் நடத்துகிறார். மக்களின் மனதுக்கு நெருக்கமான இந்த மனிதநேய மருத்துவரை அரவணைத்து மகிழ்கிறது ஆனந்த விகடன்.
அமீர் ஹம்சா – பெருந்தகையாளர்
உலகின் எல்லா உயிர்களையும் நேசமான ஒரு சங்கிலித் தொடர்பு இழையாக இணைக்கிறது. எல்லா சுயநலங்களையும் தாண்டி அந்தக் கண்ணி அறுந்துவிடாமல் என்றென்றும் காத்து நிற்கிற மனிதர்கள் சிலர். அப்படியொருவர் நம் அமீர் ஹம்சா. இராமநாதபுரத்தின் இந்த 50 வயது டூவீலர் மெக்கானிக், ஆதரவற்றோர் உடல்களை குப்பையோடு குப்பையாக அள்ளிச்செல்லும் ஒரு அவலக்காட்சியைக் கண்டதில் இருந்து தொடங்கியது இந்த நற்பணி. கடந்த 28 ஆண்டுகளில் துளியும் சோர்வில்லாமல் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உறவில்லாதோர் உடல்களைப் பெற்று அவரவர் மத வழக்கப்படி நல்லடக்கம் செய்துள்ளார் இந்த மாமனிதர். விபத்துகளில் சிதைந்து இறப்பவர்கள், நீர்நிலைகளில் மூழ்கி இறப்பவர்களென எந்த நிலையில் உடல் இருந்தாலும் விட்டு விலகாமல், பரிவோடு நின்று இறுதிச் சடங்குகள் செய்வதில் இருக்கிறது அமீர் ஹம்சாவின் அர்ப்பணிப்பு. இந்த சேவைக்கு நெகிழ்ந்து தோள் கொடுக்கிறது அவரது குடும்பம். இதற்கென எவரிடமிருந்தும் ஒற்றைப்பைசா பெறுவதில்லை அமீர். மேற்கொண்டு, சாலைகளில் திசையற்றுச் சுற்றித்திரியும் மனநலம் குன்றியவர்களையும் மீட்டு, காப்பகங்களில் சேர்க்கிறார். தானுண்டு தன் குடும்பமுண்டு என மனிதர்கள் சுருங்கிவிட்ட உலகில், அமீர் ஹம்சா ஓர் அபூர்வம்.
ஜகபர் அலி – உயிர் கொடுத்து மலை காத்தவர்
ஆயிரம் ஐன்ஸ்டீன்கள் வந்தாலும் ஒரு டன் மலைக்குன்றை நம்மால் உருவாக்க முடியாது என்பதே எதார்த்தம். பல்லாயிரம் ஆண்டுகள் இந்தப் பூமியில் நின்று நிலைத்திருக்கும் மலைகளை, அரசின் அனுமதியைக்கூடப் பெறாமல் உடைத்து இருந்த இடம் தெரியாமல் ஆக்குகிறார்கள் மாபியாக்கள். இந்த அட்டூழியத்துக்கு எதிராகத் தொடர்ந்து தீரத்தோடு போராடி, கடத்தல்காரர்களை அம்பலப்படுத்தினார், திருமயம் அருகில் உள்ள வெங்களூரைச் சேர்ந்த ஜகபர் அலி. ‘என் உயிருக்கு அச்சுறுத்தல்’ என்று அவரே வீடியோ போட்டும் அவரைக் காக்க எந்தக் கரமும் நீளவில்லை. எந்த சமரசத்துக்கும் பணியாத அந்தப் போராளியை கடந்த ஜனவரி 17-ம் தேதி துள்ளத் துடிக்க வெட்டிக் கொன்றார்கள் கல்குவாரி மாபியாக்கள். தமிழகத்தையே அதிரச் செய்தது அந்தக் கொலை. 15 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப் பிரச்னைகளுக்காகவும் இயற்கையைச் சூறையாடிய தீய சக்திகளுக்கு எதிராகவும் போராடி, அதற்கு விலையாக தன் இன்னுயிரையே அளித்தார் ஜகபர் அலி. அவரின் நினைவைப் போற்றி நம்பிக்கை விருதளித்து, நீதி வேண்டி நிற்கும் ஜகபர் அலியின் குடும்பத்தாரைக் கரம் பற்றிக்கொள்கிறது ஆனந்த விகடன்.
கிருஷ்ணம்மாள் – இரும்பு மனுஷி
‘காலையில வெள்ளைச்சேல கட்டிக்கிட்டு வா’ என்று சொல்லிவைத்துத் தன் கணவனைக் கொன்ற காவல் கறுப்பாடுகளை ‘கைதியாக வெள்ளுடை தரிக்க வைப்பேன்’ என்று சபதம் செய்து நிகழ்த்திக் காட்டிய வைராக்கிய மனுஷி கிருஷ்ணம்மாள். அதற்காக அவர் நடத்திய போராட்டம், கால் நூற்றாண்டுச் சரித்திரம். உப்பளத் தொழிலாளியான வின்சென்ட்டை விசாரணை என்ற பெயரில் அழைத்துச்சென்றவர்கள், கொடுமையாகச் சிதைக்கப்பட்ட வெற்றுடலாக அள்ளித்தந்தார்கள். ‘நீதி கிடைக்காமல் உடலை வாங்கமாட்டேன்’ என்று அன்று தொடங்கிய போராட்டம், குற்றவாளிகள் சிறைக்குச் செல்லும் நாள் வரை நிற்கவேயில்லை. உதவி ஆய்வாளர்கள் தொடங்கி கடைநிலைக் காவலர்கள் வரை 11 பேரைக் கூண்டிலேற்றிய நீதிமன்றம், 9 பேருக்கு ஆயுள் தண்டனை தந்து தர்மம் காத்தது. இடைப்பட்ட காலங்களில் கொலை மிரட்டல், கல்வீச்சு, வேலை பறிப்பு, பண பேரம் என கிருஷ்ணம்மாளின் தீவிரம் குறைக்க என்னென்னவோ செய்தார்கள் குற்றவாளிகள். எதற்கும் பணியாமல் உறுதியாக நின்றார் இந்த இரும்பு மனுஷி. ‘உன்னால் எங்களை என்ன செய்யமுடியும்?’ என்ற அதிகார மமதையின் கழுத்தைப் பிடித்து உலுக்கி, நடுநடுங்க வைத்த இந்த எளிய மனுஷி பெற்றது அவருக்கான நீதி மட்டுமல்ல, தொடரும் சிறை மரணங்களுக்கு எதிராகக் காவல்துறையின் செவுளில் விழுந்த சவுக்கடியும்கூட! இந்தப் போராளிப் பெண்ணை 2025-ம் ஆண்டின் நம்பிக்கை மனுஷியாகத் தேர்வு செய்வதில் பெருமிதப்படுகிறது ஆனந்த விகடன்!
துளிர் அமைப்பு – குழந்தைகளின் உரிமைக்குரல்
இன்றைக்கும் வீடுகளிலும் பொதுவிடங்களிலும் குழந்தைகள்மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவற்றில் அநேகம் வெளிச்சத்திற்கு வருவதில்லை என்பதே உண்மை. குடும்பத்தினரே அந்தக் கொடுமைகளை மூடிமறைத்துவிடும் அவலம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. கடந்த 22 வருடங்களுக்கும் மேலாக சமூகத்தின் இந்தப் பாராமுகத்துக்கு எதிராகத் தீவிரமாகச் செயலாற்றிவருகிறது ‘துளிர்’ அமைப்பு. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை வெளியே சொல்வது சமூக இழிவாகக் கருதப்பட்ட காலத்தில், ‘அது மூடி மறைக்கப்பட வேண்டிய விஷயமல்ல, நாம் முன்னெடுக்க வேண்டிய தார்மிகப் போராட்டம்’ என்பதை உரக்கச் சொன்னது ‘துளிர்.’ பாதிக்கப்படும் குழந்தைகளை அரவணைத்து ஆற்றுப்படுத்தி அரணாக இருந்து சட்ட உதவிகள் வழங்குவது, அந்த அதிர்ச்சியிலிருந்து அவர்களை மீட்க உளவியல் சிகிச்சை தருவது, பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் கொள்கை உருவாக்கங்களில் பங்கேற்பது, குழந்தை உரிமைகள் தொடர்பாக ஒத்த கருத்தை உருவாக்குவது என துளிரின் பணிகள் இடைவெளியின்றி நீள்கின்றன. ஒரு குழந்தையைப் பாதுகாப்பது தனிநபரின் கடமையல்ல, ஒட்டுமொத்தச் சமூகத்தின் பொறுப்பு என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி அவர்களின் ஒருமித்த குரலாக தேசமெங்கும் ஒலிக்கும் ‘துளிர்’ அமைப்பின் நிறுவனர் வித்யா ரெட்டி மற்றும் குழுவினருக்கு 2025-ம் ஆண்டுக்கான நம்பிக்கை மனிதர்கள் விருதளித்துப் போற்றுகிறது ஆனந்த விகடன்.
கவிதா – சிங்கப்பெண்
பெண்களைக் குறுகிய வட்டத்துக்குள் நெருக்கிச் சுருக்கும் பிற்போக்குச் சங்கிலிகளை அறுத்தெறிந்த வீர மங்கைகளில் ஒருவர் ‘கபடி’ கவிதா. சிறுமிகள் கண்ணாமூச்சி ஆடும் வயதில், அந்தக் கூட்டத்திலிருந்து விலகி மண்ணைத் தொட்டு முத்தமிட்டுக் கபடி ஆட வந்த இந்த ஆவடி பெண்ணுக்கு இளமைக்காலம் அவ்வளவு இனிமையாக இல்லை. சின்ன வயதிலேயே அம்மாவின் அரவணைப்பை இழந்தவருக்கு அந்தக் குறை தெரியாமல் வளர்த்தார்கள் தந்தையும் சகோதரிகளும். அதற்குக் கைமாறாக கவிதா பெற்றுக் கொடுத்தது, ஊர் போற்றும் புகழும் உலகம் மெச்சும் பதக்கங்களும். 2000-த்தின் தொடக்கத்தில் தமிழ்நாடு அணிக்குள் வந்த கவிதா, ஆறே ஆண்டுகளில் இந்திய அணிக்குள் நுழைந்தார். வெகுசீக்கிரம் அவரின் பரபர வேகமும் ஆல்ரவுண்ட் திறமையும் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பையே பெற்றுக் கொடுத்தது. ஆசியப் போட்டிகள், ஆசிய சாம்பியன்ஷிப், தெற்காசிய சாம்பியன்ஷிப் எனப் பல சர்வதேசத் தொடர்களில் கவிதா தலைமையிலான இந்திய அணி தங்கம் அள்ளிவந்தது. களங்களில் சாதித்து முடித்து, 2012-ல் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார். அவர் வழிகாட்டுதலில் இன்று தமிழ்நாடு பெண்கள் அணி உச்சத்தை எட்டுகிறது. அதற்குப் பரிசாக இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் பொறுப்பு தேடி வந்தது. 2023-ல் சீனாவில் நடந்த ஆசியப்போட்டியில் தங்கம், 2025 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், இப்போது வங்கதேசத்தில் நடந்த உலகக்கோப்பையிலும் தங்கம் என அடுத்தடுத்து சொல்லியடித்திருக்கிறார். தமிழகத்தின் பெருமைமிகு முகமான கவிதாவுக்கு நம்பிக்கை விருது வழங்கிப் போற்றுகிறது விகடன்.
காளி வெங்கட் – யதார்த்த திரைக்கலைஞன்
திரையுலகில் மதிப்பும் மரியாதையுமாகக் கொண்டாடப்படுகிற அபூர்வமான குணச்சித்திர நடிகர். புதுமையான கதைகள், அதில் அசர வைக்கும் திரைமொழி என புதிதாக வந்திருக்கும் இன்றைய இயக்குநர்களின் விருப்பத்தேர்வு இவர்தான். சாதாரண பாத்திரங்களைக்கூட தன் உடல்மொழியால் உயிரூட்டி அதகளம் செய்வதில் காளி, பெரிய கில்லி. இவரை மனதில் வைத்தே இப்போது பல திரைக்கதைகள் உருவாகி உயிர் பெறுகின்றன. புதுப்புது உடல்மொழி, விதவித வட்டார வழக்கு என கதாபாத்திரத்துக்கும் காட்சிக்கும் நியாயம் சேர்ப்பது இவரின் ஸ்பெஷல்! பெரிய ஹீரோ படங்களோ, சிறு பட்ஜெட் சினிமாக்களோ, இன்று எல்லோருக்கும் தேவைப்படுகிறார் இந்த சின்சியர் சினிமாக்காரர். ‘மெட்ராஸ் மேட்னி’ கண்ணனாக இவர் காட்டியது மிடில் கிளாஸ் அப்பாக்களின் அச்சு அசலான நிஜ முகம். காமெடி, குழப்பம், எமோஷன் என எல்லா உணர்வுகளையும் ‘ஹவுஸ்மேட்ஸ்’ ரமேஷாகக் கலந்துகட்டி அடித்தார். கம்பெனி கம்பெனியாக ஏறியிறங்கி வாய்ப்பு கேட்டவரிடம், இன்று கால்ஷீட் கேட்டுக் காத்திருக்கின்றன அதே சினிமா கம்பெனிகள். சமகால தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத யதார்த்த திரைக்கலைஞன் காளி வெங்கட்டை 2025-ம் ஆண்டின் நம்பிக்கை மனிதர்களில் ஒருவராகத் தேர்வுசெய்து மனமுவந்து பாராட்டுகிறது விகடன்.
சுப்ரஜா தாரினி – ஆமைகளைக் காக்கும் அன்னை
கடலைத் தூய்மையாக்கி, பிற உயிர்களும் இனப்பெருக்கம் செய்ய இடம் அமைத்துத் தருகிற அற்புத சேவகர்கள் ஆமைகள்தான். கடலின் வளத்தையும் நலத்தையும் எடுத்துக்காட்டும் இந்த சாத்வீக உயிரினத்தை குற்ற உணர்வே இல்லாமல் கொன்று குவிக்கிறார்கள். முரட்டுத்தனமான மீன்பிடி முறைகளால் வலைகளில் சிக்கி மூச்சுத்திணறி இறந்துபோகின்றன ஆயிரமாயிரம் ஆமைகள். கிட்டத்தட்ட அழியும் நிலையிலிருக்கிற ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளைக் காப்பதற்காக தாய்மையோடு தன்னை அர்ப்பணித்தவர் சுப்ரஜா. தமிழகம், ஆந்திரா, ஒடிசாவென கிழக்குக் கடற்கரை முழுவதும் 700 கிலோ மீட்டரில் ஆமைகளையும் ஆமை முட்டையிடும் நிலக்கூடுகளையும் பாதுகாக்கிறார் சுப்ரஜா. இந்தப்பணியை ஒரு சமூக இயக்கமாகக் கட்டமைத்தது தான் அவரது மெச்சத்தக்க பணி. 25 ஆண்டுகளுக்கு முன் சுப்ரஜா ஆரம்பித்த ‘ட்ரீ பவுண்டேஷன்’ இதுவரை 44 லட்சம் கடல் ஆமைக் குஞ்சுகளைப் பாதுகாத்துக் கடலுக்குள் அனுப்பியிருக்கிறது. மகப்பேற்றுக்குத் தாய்வீடு வரும் மகளைப்போல, தாம் பிறந்த இடத்துக்கே வரும் ஆமைகளின் முட்டைகளைக் காக்க கிழக்குக் கடலோரம் 142 காப்பகங்களை உருவாக்கியிருக்கிறார். மீனவ கிராமங்களிலிருந்தே இளைஞர்களைத் தேர்வு செய்து கடல் ஆமைப் பாதுகாவலர்களாக மாற்றியது, பள்ளி கல்லூரிகளுக்கெல்லாம் பயணித்து ஆமைகளின் தேவைகளைப் பேசுவது, படகுகளிலேயே பயணித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதென சுப்ரஜாவின் பணிகள் இடைவிடாது விரிகின்றன. தமிழகம் தாண்டி கோவா வரைக்கும் விரிகின்றன சுப்ரஜா உருவாக்கிய ஆமைகளுக்கான அரண்கள். அறுபது வயதிலும் இடைவிடாது இயங்கிக்கொண்டிக்கிற இந்த ஆமை உயிர்காக்கும் அன்னை, எல்லோருக்குமான நம்பிக்கை மனிதர்!
கணேசன் – அக்கறையான மீட்பன்
நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு தோட்டத் தொழிலாளிகளாக கேரளாவுக்குச் சென்ற தமிழர்களின் வாழ்க்கை இன்னும்கூட விடியவில்லை. அடுத்தடுத்த தலைமுறைகளும் அந்தத் தேயிலைக் காட்டுக்குள்ளாகவே முடிந்துபோகின்றன. மலையாளம் படிக்காததால் அடுத்தகட்ட நகர்வு சாத்தியமாகவே இல்லை. அடர் காட்டுக்குள் புகுந்து புதுப்பாதை போடும் களிற்றைப் போல அவர்களுக்கு ஒரு ராஜபாதையைப் போட்டுத் தந்திருக்கிறார் வண்டிப்பெரியாறு கணேசன். அரணிட்டு நின்ற நூற்றாண்டுத் தளையில் இருந்து விடுபட நினைத்த கணேசன், அரசுப்பணிக்குத் தேர்வெழுத விரும்பினார். கோச்சிங் சென்டர் போகுமளவுக்கு வளமோ, வசதியோ இல்லை. தன்னைப்போலவே ஆர்வம் கொண்ட பத்துப் பேரிடம் பணம் வாங்கி, தான் கோச்சிங் போய்க் கற்றதை அவர்களுக்கும் சொல்லித்தந்தார். அவர்கள் அத்தனை பேருமே முதல் முயற்சியிலேயே கேரள அரசு ஊழியரானார்கள். ‘பத்துப் பேருக்கு சாத்தியமானது, நூறு பேருக்கு, ஆயிரம் பேருக்கு ஏன் சாத்தியமாகாது’ என்ற தேடலில் தொடங்கியது அவரது அடுத்தகட்டப் பயணம். தோட்டம் தோட்டமாகச் சென்று இளைஞர்களைத் திரட்டித் தேர்வுக்குத் தயார் செய்தார். மலையாளப் பாடத்திட்டத்தைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்தது, தேர்வை எளிதாக்கியது. பள்ளி தொடங்கி காவல்துறை வரை 700 தமிழர்கள் இன்று கேரள அரசு ஊழியர்களாகிய அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. பத்தினம்திட்டாவில் தாலுகா வழங்கல் அலுவலராகப் பணியாற்றும் கணேசன், இன்றைக்கும் தினமும் 5 மணி நேரம் பயணம் செய்து பயிற்சியளிக்கிறார். ஆண்டாண்டுகளாக ஒட்டியிருந்த அடையாளத்தை மாற்றிப் பலருக்கும் நிறைவாழ்வு பெற்றுத்தந்த இந்த மீட்பனுக்கு 2025-ம் ஆண்டுக்கான நம்பிக்கை மனிதர் விருதளித்துப் பெருமைகொள்கிறது ஆனந்த விகடன். நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு தோட்டத் தொழிலாளிகளாக கேரளாவுக்குச் சென்ற தமிழர்களின் வாழ்க்கை இன்னும்கூட விடியவில்லை. அடுத்தடுத்த தலைமுறைகளும் அந்தத் தேயிலைக் காட்டுக்குள்ளாகவே முடிந்துபோகின்றன. மலையாளம் படிக்காததால் அடுத்தகட்ட நகர்வு சாத்தியமாகவே இல்லை. அடர் காட்டுக்குள் புகுந்து புதுப்பாதை போடும் களிற்றைப் போல அவர்களுக்கு ஒரு ராஜபாதையைப் போட்டுத் தந்திருக்கிறார் வண்டிப்பெரியாறு கணேசன். அரணிட்டு நின்ற நூற்றாண்டுத் தளையில் இருந்து விடுபட நினைத்த கணேசன், அரசுப்பணிக்குத் தேர்வெழுத விரும்பினார். கோச்சிங் சென்டர் போகுமளவுக்கு வளமோ, வசதியோ இல்லை. தன்னைப்போலவே ஆர்வம் கொண்ட பத்துப் பேரிடம் பணம் வாங்கி, தான் கோச்சிங் போய்க் கற்றதை அவர்களுக்கும் சொல்லித்தந்தார். அவர்கள் அத்தனை பேருமே முதல் முயற்சியிலேயே கேரள அரசு ஊழியரானார்கள். ‘பத்துப் பேருக்கு சாத்தியமானது, நூறு பேருக்கு, ஆயிரம் பேருக்கு ஏன் சாத்தியமாகாது’ என்ற தேடலில் தொடங்கியது அவரது அடுத்தகட்டப் பயணம். தோட்டம் தோட்டமாகச் சென்று இளைஞர்களைத் திரட்டித் தேர்வுக்குத் தயார் செய்தார். மலையாளப் பாடத்திட்டத்தைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்தது, தேர்வை எளிதாக்கியது. பள்ளி தொடங்கி காவல்துறை வரை 700 தமிழர்கள் இன்று கேரள அரசு ஊழியர்களாகிய அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. பத்தினம்திட்டாவில் தாலுகா வழங்கல் அலுவலராகப் பணியாற்றும் கணேசன், இன்றைக்கும் தினமும் 5 மணி நேரம் பயணம் செய்து பயிற்சியளிக்கிறார். ஆண்டாண்டுகளாக ஒட்டியிருந்த அடையாளத்தை மாற்றிப் பலருக்கும் நிறைவாழ்வு பெற்றுத்தந்த இந்த மீட்பனுக்கு 2025-ம் ஆண்டுக்கான நம்பிக்கை மனிதர் விருதளித்துப் பெருமைகொள்கிறது ஆனந்த விகடன்.